தஞ்சாவூர்: மருத்துவத்துறையில் புதிய தமிழ்சொற்களை அதிகம் பரப்பிய “தமிழினி புலனம்” குழுவின் 6-ம் ஆண்டு தொடக்க விழா தஞ்சாவூரில் நடைபெற்றது.
மருத்துவர்களும் செவிலியர்களும் பெருமளவில் அங்கம் வகிக்கின்ற வாட்ஸ்-அப் குழுவான ‘தமிழினி புலனம்' மூலம் தமிழ் எழுத்தின் மேல் தங்களுக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தும் களமாகவும் பயன்படுத்தி மன அழுத்தம் இல்லாமல் இதில் பங்கேற்று வருகின்றனர்.
புதிய தமிழ் சொற்கள், புதுமொழிகள், பழமொழிகள், விடுகதைகள், கவிதைகள் என தினமும் இந்த குழுவில் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த குழு, மருத்துவத் துறையினரின் எழுத்தார்வத்தை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல் சமூக ஈடுபாட்டோடும் செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு நாளும் பணிச்சுமையால், மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படும் மருத்துவ துறையினர் தங்களின் மன இறுக்கத்தை குறைத்து கொள்ளவும், தங்களிடம் இயற்கையாகவே இருக்கும் எழுத்தாற்றலையும், சமூகம் சார்ந்த அக்கறையையும் வெளியுலகுக்குப் பயன்பட வழியேற்படுத்தித் தருவதுதான் இந்த குழுவின் முதன்மையான பணி.
முதலில் 25 நபர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழு, உறுப்பினர்களின் பேரார்வத்தால் முழுமையான குழுவாக விரிவடைந்திருக்கிறது. குழுவில் உள்ள 477 பேரில் 352 பேர் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களும் மீதமுள்ளவர்களில் இலக்கியவாதிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் இருக்கிறார்கள்.
இந்தக் குழுவின் மூலம் நீட் தேர்வில் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணமில்லா இணைய வழி வழிகாட்டுதல் மற்றும் தமிழில் மருத்துவ வகுப்புகள் 'தமிழினி துணைவன்' என்ற பெயரில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைய உறுதுணையாக இருந்தது.
இந்த குழுவை மருத்துவர் வீ.சி.சுபாஷ்காந்தி என்பவர் 2019-ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகிறார். இவை அனைத்தையும் ரசனையுடனும், ஆர்வத்துடனும் ஒருங்கிணைக்கிறார் செவிலியர் இரா.பாக்கியலட்சுமி.
மருத்துவத்துறை சேவை செய்யும் துறையாக இல்லாமல் பணம் தேடும் ஒரு தொழிலாக மாறிவிட்டது என்ற கருத்து ஆழமாக பதிந்திருக்கும் இந்த காலகட்டத்தில், ஒரு வாட்ஸ் அப் குழு மூலமாக தமிழுக்கும், மக்களுக்கும் சேவையாற்றும் இந்த மருத்துவ குழு தனது 6-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையொட்டி தஞ்சாவூரில் இன்று முத்தமிழை போற்றும் வகையில் இயல், இசை, நாடகம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தி இக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் சங்கமிக்கும் களமாக “அன்புடன் தமிழினி” நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழினி புலனம் 6-ம் ஆண்டு தொடக்க விழாவை குறிக்கும் வகையில் 6 கிலோ எடை கொண்ட கேக் வெட்டப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.