காஞ்சிபுரம்: திமுக நூற்றாண்டைக் கடப்பதற்குள் மாநில சுயாட்சிக் கொள்கையை வென்றெடுக்க நாம் மீண்டும் உறுதியேற்போம் என்று காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்ற திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திமுக பவளவிழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்றது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
வீழ்ச்சியுற்ற தமிழகத்தை எழுச்சியுரச் செய்ய அண்ணா தொடங்கிய திமுகவின் பவள விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம். திமுக என்ற மூன்று எழுத்தில்தான் நமது மூச்சு,பேச்சு, உயிர், உணர்வு அடங்கியுள்ளது. கூட்டணிக் கட்சித் தலைவர்களின் வாழ்த்துகளில் நாங்கள் பெருமை அடைகிறோம். நாங்கள் செய்த சாதனைகளுக்கு நீங்கள் உறுதுணையாக இருந்துள்ளீர்கள். அதனால் எங்கள் பெருமையில் உங்களுக்கும் பங்கு உண்டு.
எங்கள் இயக்கம், உங்கள் இயக்கம் என்று இல்லாமல் நாம் அனைவரும் ஒரே கொள்கையுடைய தோழமை இயக்கங்களாக செயல்படுகிறோம். நாம் அமைத்த கூட்டணியைப் பார்த்துத்தான் இண்டியா கூட்டணி உருவானது. பிற கட்சிளைச் சேர்த்து உருவாக்கும் கூட்டணி தேர்தல் முடிந்ததும் கலைந்துவிடும். நம் கூட்டணி அப்படிஅல்ல. கொள்கை ரீதியாக உறுதியாக இருக்கும் நம்மைப் பார்த்து எதிரிகளுக்கு பொறாமை வருகிறது. அதனால் அர்ப்பத்தனமான காரியங்களைச் செய்து கனவு காண்கிறார்கள். அவர்கள் கனவு ஒருபோதும் பலிக்காது.
மதவாதம், பாசிஸம் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக நாம் ஐக்கியமாகி உள்ளோம். பவள விழா கொண்டாடும் திமுகவின் நூற்றாண்டுக்குள் சுயாட்சி என்ற அடிப்படையில் எல்லா அதிகாரங்களும் மாநிலத்துக்கு கிடைக்கும் வகையில் சட்ட முன்னெடுப்புகளை திமுக எடுக்கும் என்று முப்பெரும் விழாவில் அறிவித்தேன். அதன்படி திமுக நூற்றாண்டைக் கடப்பதற்குள் மாநில சுயாட்சிக் கொள்கையை வென்றெடுக்க நாம் மீண்டும் உறுதி ஏற்போம்.
இந்தியாவில் ஒரேநாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது. 1967-ல்இருந்த மக்கள் தொகையும், வாக்காளர்களும், இப்போதுள்ள மக்கள்தொகையும் வாக்காளர்களும் எவ்வளவு, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலையே ஒரே நேரத்தில் நடத்த முடியவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைச் சாத்தியமற்ற, சிக்கல் நிறைந்த பிரச்சினையாகும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது. தற்போது பாஜக அரசுக்கு பெரும்பான்மை இல்லை. எனவே, பாஜக தலைமை எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
இக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழககாங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சி துணை தலைவர் ஏ.ஜி.மவுரியா, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிப் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன்அன்சாரி, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி தலைவர் பொன்.குமார், ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், தமிழ்மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் பி.என்.அம்மாவாசி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
கமல்ஹாசன் வாழ்த்து மடல்: திமுக பவளவிழாவையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துரை அனுப்பினார்.
இவ்விழாவில், திமுக பொருளாளர் டி.ஆர்பாலு எம்.பி., உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும் குறு, சிறு, நடுத்தரதொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட துணைச் செயலாளரும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறுவேடல் க.செல்வம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினருமான க.சுந்தர், குன்றத்தூர் (தெ) ஒன்றிய செயலாளரும் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவருமான படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூர் ஒன்றியக் குழு பெருந்தலைவர் சரஸ்வதி மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆர்.யுவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.