மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பியுமான சி.வி.சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் பற்றிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதில் பங்கேற்ற அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்தும் சமீபத்தில் பாஜக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் தமிழக முதல்வர் அண்ணா குறித்து சில கருத்துகளைத் தெரிவித்தார். இது மிகப் பெரியளவில் சர்ச்சையானது. இதற்கு திமுக, திக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அண்ணாமலையில் பேச்சிற்கு அதிமுகவில் இருந்தும் கடுமையான கண்டங்கள் எழுந்துள்ளது.
அ.தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சி. வி.சண்முகம் எம்.பி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், "பேரறிஞர் அண்ணா இல்லையென்றால் தமிழகம் இல்லை, நீயும் இல்லை நானும் இல்லை, இந்த ஆறு சதவீதம் மட்டுமே நாட்டை ஆண்டிருப்பார்கள். மீதம் உள்ள 93 சதவீதம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிறபடுத்தப்பப்பட்ட மக்கள் இன்றைக்கு கூலித் தொழிலாளியாக வாழ்ந்திருப்பார்கள், சலவைத் தொழிலாளர்களாக, ரிக்ஷா தொழிலாளராக இன்றும் நாம் வாழ்ந்திருப்போம். இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழகம் முன்னேறிய மாநிலம். படிப்பிலும் சரி, தொழில் வளர்ச்சியிலும். இந்த வசதிகளுக்கும் இந்த வளர்ச்சியையும் காரணம் பேரறிஞர் அண்ணா.
அனைவருக்கும் சம உரிமை, இட ஒதுக்கீடு, சீர்திருத்தத் திருமணத்தை அங்கீகரிப்பது, பெண்களுக்குச் சம உரிமை, தமிழுக்கு முக்கியத்துவம், இந்திக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து மாற்றங்களைக் கொண்டு வந்தவர். நாட்டிலேயே கேரளாவுக்கு அடுத்து காங்கிரஸ் பேரியக்கம் தோற்கடிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. கேரளாவிலாவது அதன் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். அங்கே காங்கிரஸ், இடதுசாரிகள் என மாறி மாறியே ஆட்சி நடக்கிறது. ஆனால், இங்கே 56 ஆண்டுகளாக திமுகவும் அதிமுகவும் தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளை விரட்டி அடித்துள்ளன" என்றார்
மேலும், 1959ல் நடந்ததாக ஒரு சம்பவத்தைச் சொல்யிருக்கிறார் அண்ணாமலை. அந்தச் சம்பவத்திற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. தமிழ்நாட்டை வளர்த்தெடுத்த அண்ணா குறித்துப் பேச அண்ணாமலைக்கு எந்தவொரு தகுதியும் இல்லை. பாஜக தேசிய தலைமை அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதாக அறிவித்துள்ளனர். இதற்காகப் பிரதமர் மோடி நமது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதிமுகவின் பலம் மோடி, அமித் ஷாவுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால், அண்ணாமலைக்குத் தெரியவில்லை. கூட்டணியில் இருந்து கொண்டு இப்படிப் பேசுவதை ஏற்க முடியாது என்று ஆவேசமாக பேசினார்.
முதலில் ஜெயலலிதாவை விமர்சித்தார். இப்போது அண்ணாவை விமர்சிக்கிறார். அவர் தெரியாமல் பேசவில்லை. அண்ணாமலை திட்டமிட்டு அண்ணாவைத் தரம் தாழ்ந்து பேசியுள்ளார். உங்களுக்கு அண்ணாவைப் பற்றி என்ன தெரியும். இனியும் இதுபோன்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது. கூட்டணியில் இருந்து கொண்டே இப்படி பேச்சுவதை பார்த்தால் உள்நோக்கத்தோடு திமுகவுடன் இணைத்துச் செயல்படுகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.
லோக் சபா தேர்தலில் அதிமுக தேவை என்பதை பாஜக தேசிய தலைமை உணர்ந்துள்ளது. ஆனால், அதற்கு நேர் எதிராக அண்ணாமலை செயல்படுகிறார். மோடி பிரதமர் ஆக வேண்டும் என்ற எண்ணம் அண்ணாமலைக்கு இல்லை. அண்ணாமலை இப்போது பாத யாத்திரை என ஒன்றுக்குச் செல்கிறார். அது குறித்து யாருக்கும் கவலை இல்லை. இதனால் நானும் ரவுடி தான் என்பதைப் போல அவர் தனது இருப்பை காட்டி இப்படிப் பேசுகிறார். இனியும் அதிமுக தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். உங்கள் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள்.. இதுவே உங்களுக்கு இறுதி எச்சரிக்கை" என்று அவர் பேசினார்.