வங்கிக் கணக்கை முடக்குவதாக பாஜக எங்களை மிரட்டியது... பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு!


பிரேமலதா விஜயகாந்த்

அதிமுகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என பாஜக தங்களை மிரட்டியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த்

மக்களவைத் தேர்தலில் பாஜக தங்களுடன் கூட்டணி அமைக்க பாமக மற்றும் தேமுதிக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் பாமக அந்த கூட்டணிக்கு சென்று விட்ட நிலையில் தேமுதிக, அதிமுக கூட்டணியில் இணைந்தது. இந்த நிலையில் தங்களைக் கூட்டணிக்கு வருமாறு பாஜக நிர்பந்தம் செய்து மிரட்டியதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக அக்கூட்டத்தில் இடம்பெற்றுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் ஶ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரேம்குமாரை ஆதரித்து நேற்று இரவு வாக்குசேகரித்தார். அப்போது பேசிய அவர், பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அச்சுறுத்தல் கொடுத்தார்கள். அதிமுகவுடன் கூட்டணி அமைக்கக்கூடாது என மிரட்டினார்கள்.

பிரேமலதா விஜயகாந்த்

அப்படி செய்தால் தேமுதிகவின் வங்கிக் கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது. பாஜகவிலிருந்து எங்களுக்கு எத்தனையோ நிர்பந்தங்கள். ஆனால், நாங்கள் பனங்காட்டு நரி, இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம். இதையெல்லாம் மீறித்தான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவை ஜெயலலிதா போல் எடுத்தேன்.

அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக கொண்டுவந்ததாக சொல்கிறார் உதயநிதி. பாமக, பாஜக ஆகிய கட்சிகள் நம்முடன் இல்லாததற்கு கையெடுத்துக் கும்பிட வேண்டும்" என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார். பிரேமலதாவின் இந்த பேச்சு தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

x