பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினமும் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பக்தர் களுக்கு இடையூறாக கிரிவலப் பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தனியார் வாகனங் கள் கிரிவலப் பாதையில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளன.
அதனால் பழநி கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் சென்று வர வசதியாக பேட்டரி கார்கள், மினி பேருந்து மற்றும் மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்களில் பயணிக்க கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பேட்டரி கார்களை இயக்கும் தனியார் ஒப்பந்தப் பணியாளர்கள் பக்தர்களிடம் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் உங்கள் குரல் சேவையில் தொடர்புகொண்ட புதுச்சேரியைச் சேர்ந்த மேகநாதன் கூறியதாவது: கடந்த வாரம் பழநி கோயிலுக்கு வந்தோம். கிரிவலப் பாதையில் தனியார் வாகனங்கள் செல்ல தடை உள்ளதால் பேட்டரி காரில் சென்றோம். பேட்டரி காரில் இலவசம் என எழுதப்பட்டுள்ளது. ஆனால், இறங்கும்போது பேட்டரி காரை இயக்கிய பணியாளர் பணம் கேட்டார். கொடுக்க மறுத்ததால் கோபம் அடைந்தார்.
அதேபோல், கிரிவலப் பாதையில் நடந்து செல்லும்போது காலியான இருக்கைகளுடன் சென்ற பேட்டரி காரை நிறுத்தி ஏற முயற்சித்தோம். ஆனால், பேட்டரி காரை நிறுத்தாமல் சென்று விட்டனர். பேட்டரி கார்கள், மினி பேருந்தில் பக்தர்கள் விரும்பும் இடத்தில் ஏறவும், இறங்கவும் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். அதில் பயணிக்க பக்தர்களிடம் பணம் வசூலிப்பதை கண்காணித்து தடுக்க வேண்டும்’ என்றார்.
இதுகுறித்து பழநி கோயில் அதிகாரிகள் கூறுகையில், கிரிவலப் பாதையில் பக்தர்களின் வசதிக்காக பேட்டரி கார்கள், மினி பேருந்து என மொத்தம் 14 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில் பயணிக்க இலவசம் என ஒலிபெருக்கி மூலம் தெரியப்படுத்தி வருகிறோம். இதை மீறி பக்தர்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணம் கேட்டால் கோயில் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் புகார் செய்யலாம், என்றனர்.