மழைநீர் வடிகால் கட்ட மயான சுற்றுச்சுவர் இடிப்பு: இந்து முன்னணியினர் திரண்டதால் பரபரப்பு @ கோவை


ஆத்துப்பாலத்தில் மயானம் முன்பு திரண்டிருந்த இந்து முன்னணி அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் மற்றும் அதிகாரிகள்.

கோவை: கோவை உக்கடம் அருகே மழைநீர் வடிகால் பணிகளுக்காக மயானத்தின் இடிக்கப்பட்டதைக் கண்டித்து இந்து முன்னணியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை உக்கடம் அருகே, ஆத்துப்பாலத்தில் இந்து சமுதாய மக்கள் பயன்படுத்தும் மயானம் உள்ளது. தற்போது, இப்பகுதியில் உக்கடம் - ஆத்துப்பாலம் சாலை மேம்பாலப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மழைநீர் வடிகால் கட்டமைப்பு ஏற்படுத்துதல், சாலை அமைத்தல் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், மேற்கண்ட மயானத்தின் சாலையோரம் இருந்த சுவர் இன்று (மே 25) இடிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவை மாவட்ட இந்து முன்னணி அமைப்பினைச் சேர்ந்த மாவட்ட தலைவர் கே.தசரதன், செய்தி தொடர்பாளர் சி.தனபால் உள்ளிட்ட ஏராளமானோர் இன்று மாலை ஆத்துப்பாலத்தில் உள்ள மயானம் முன்பு திரண்டனர்.

நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அங்கு வந்த போலீஸார் அங்கு திரண்டிருந்த இந்து முன்னணி அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து இந்து முன்னணி அமைப்பினர் கூறும்போது, ‘‘முன்னரே, ஆத்துப்பாலம் மயானம் முறையான அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இந்து சமுதாய மக்கள் வேறு வழியின்றி இதனை பயன்படுத்தி வந்தனர். இச்சூழலில், மயானத்தின் சுற்றுச்சுவரை இடித்து நெடுஞ்சாலைத்துறையினர் சேதப்படுத்தியுள்ளனர். சமாதிகளையும் சேதப்படுத்தியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. சுற்றுச்சுவரை சீரமைத்து தர வேண்டும் என நெடுஞ்சாலைத்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளோம்’’ என்றனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது,‘‘சாலை மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்புக்காக சுற்றுச்சுவர் அகற்றப்பட்டது. சில அடி தூரம் பணிகள் மேற்கொள்ளப்படும். அப்பணிகள் முடிந்த பின்னர், சுற்றுச்சுவர் ஏற்படுத்தித் தரப்படும் என அவர்களிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

x