தெற்காசிய நாடுகளிலேயே அதிக முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் விளங்கும் - முதல்வர் ஸ்டாலின்


முதல்வர் ஸ்டாலின்

ராணிப்பேட்டை: தெற்காசிய நாடுகளில் முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் விளங்க வேண்டுமென்ற இலக்கை நோக்கி பயணிப்பதாக முதல்வர் மு. க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட பனப்பக்கம் சிப்காட் வளாகத்தில் 470 ஏக்கரில் ரூ. 9000 கோடி மதிப்பில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று ( செப். 28-ம் தேதி) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பேசியதாவது, " இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் வாகன உற்பத்தி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

தமிழகத்தில் தொழில் நிறுவனத்தை விரிவுப்படுத்தும் பணியினை நீங்கள் பெருமையாக நினைப்பது போல, தமிழகம் டாடா குழுமத்தின் மீது எத்தகைய நம்பிக்கையை வைத்துள்ளதோ அதுபோல நாங்களும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமின்றி உலகின் பெரிய நிறுவனங்களுக்கு முகவரியாக தமிழகம் உள்ளது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் பங்கேற்பது நமக்கு கூடுதல் மகிழ்ச்சி. அவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் உலகின் புகழ்பெற்ற நிறுவனத்துக்கு தலைமை பொறுப்பு ஏற்று இருப்பது தமிழகத்துக்கு பெருமையாகும்.

வேளாண் குடும்பத்தை சேர்ந்த இவர், பெருமைக்குரிய அரசு பள்ளியில் பயின்று இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது அவர் தன்னம்பிக்கையும் அறிவாற்றலும் தான் காரணம் என்பதை நாம் மறக்கலாகாது. இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் தலைவராக உள்ள சந்திரசேகரன், நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் அவர் முன்மாதிரியாக உள்ளார். இந்தியாவின் முகமாக உள்ள டாடா குழுமம் எஃகு, தகவல் தொடர்பு, விமானத்துறை, ஆட்டோமொபைல், நுகர்வோர் பொருட்கள் உட்பட பல துறைகளில் தடம் பதித்து உள்ளது.

முதல்வர் ஸ்டாலின்

உலக அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படக்கூடிய இந்தியாவின் பன்னாட்டு நிறுவனம் என்ற பெருமையும் இவர்களுக்கு உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல நாடுகளில் உற்பத்தி ஆலைகளை தொடங்கி அங்கு முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. டாடா குழுமத்தின் சார்பில் பல்வேறு தொழிற்சாலைகள் தமிழகத்தில் இயங்கி வருவதால் இங்குள்ள பல்லாயிரம் இளைஞர்கள் மற்றும் குறிப்பாக பெண்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இதன் மூலமாக அவர்களின் வாழ்வாதாரமும் உயர்ந்துள்ளது.

டாடா நிறுவனம் தனது நிறுவனத்தை தொடங்க ராணிப்பேட்டை தேர்வு செய்ததற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும், டாடா குழுமம் கூடுதல் முதலீடுகளை தமிழகத்தில் செய்ய வேண்டும். ஏனென்றால் இது எனது மாநிலமோ, அவர்கள் மாநிலமோ இல்லை. நமது மாநிலமாகும்.

நான் அடிக்கடி சொல்வது போல் அனைத்து மாவட்டத்தின் சீரான வளர்ச்சியை நோக்கி இந்த அரசு பயணித்து வருகிறது. அந்த வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எனது கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்திலும் இணைந்து செயல்பட்டு வருகிறது. மேலும், 1973- ம் ஆண்டு தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல் சிப்காட் தொடங்கி வைத்தார்.

இந்த 50 ஆண்டுகளில் பல தொழிற்சாலைகள் இங்கு செயல்பட்டு வருவது பெருமைக்குரிய விஷயமாகும். இந்தியாவில் தமிழகம் வாகன உற்பத்திக்கு தலைநகரமாக உள்ளது. நாட்டின் 40 சதவீதம் வாகன உற்பத்தி தமிழகத்தில் நடை பெறுகிறது. எலக்ட்ரிக்கல் வாகன உற்பத்திக்கும் தமிழகம் முதலிடமாக உள்ளது. இங்கு டாடா போல உலகளவில் பல முன்னணி கார் நிறுவனங்கள் தங்கள் வாகன உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு முன்மாதிரியாக விளங்கி வருகிறது.

நாட்டின் 2 வது பொருளாதாரமாக தமிழகம் உள்ளது. தொழில் வளர்ச்சியில் 2030- ம் ஆண்டுக்குள் தமிழகம் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்கை நோக்கி நாம் பயணித்து வருகிறோம். இந்தியாவில் மட்டும் இன்றி தெற்காசிய நாடுகளிலே முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் முன்மாதிரி மாநிலமாக தமிழகம் விளங்க வேண்டும் என்று இலக்கை நோக்கி பயணித்து வருகின்றோம். அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி முதலீடுகளை நாம் ஈர்த்துள்ளோம். இதன் மூலமாக நேரடியாகவும் மறைமுகமாகவோ 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமின்றி அதன் செயல்படுத்துவதும் பணிகளையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. அதற்கு சான்று தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம். அனைவருக்கும் சமூக நீதி என்ற வளர்ச்சியை நோக்கி இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்மாதிரியாக விளங்கி வருகிறது" என்றார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், ஆர். காந்தி, டிஆர்பி ராஜா, அரசு தலைமை செயலாளர் முருகானந்தம், அரசு செயலாளர் அருண் ராய், ராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா , டாடா குழுமத்தின் நிறுவனர் சந்திரசேகரன், வழிகாட்டி நிறுவன மேலாண்மை இயக்குநர் விஷ்ணு , சிப்காட் மேலாண்மை இயக்குநர் செந்தில் ராஜ், டாடா குழுமத்தின் நிதி அலுவலர் பாலாஜி, டாடா மோட்டார்ஸ் மேலாண்மை இயக்குநர் சைலேஷ் சந்திரா , ஜெ. எல். ஆர்.நிறுவன இயக்குநர் ப்ராங்க் லட்விக், எம்எல்ஏக்கள் முனிரத்தினம் ( சோளிங்கர்), கார்த்திகேயன் ( வேலூர்) , ஈஸ்வரப்பன் ( ஆற்காடு) மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட அரசு துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

x