கும்பகோணம்: கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கம் சார்பில் முதலாம் ராஜேந்திர சோழனின் கங்கை படையெடுப்பின் போது, வெற்றிப் பரிசாகக் கொண்டு வரப்பட்டச் சின்னங்களைப் பார்வையிடும் வரலாற்று மரபு நடை சுற்றுலா இன்றும் நாளையும் என 2 நாட்களுக்கு நடைபெறுகிறது.
முதலாம் ராஜேந்திர சோழனின், கங்கை படையெடுப்பின் மூலம் வெற்றிபெற்ற நாடுகளில் இருந்து வெற்றி பரிசாகக் கொண்டு வரப்பட்ட கலைநயமிக்க சிற்பங்கள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் மரபு நடை சுற்றுலா இன்றும் நாளையும் 2 நாட்கள் நடைபெறுகிறது.
இதையொட்டி இன்று காலை, வங்கதேசத்திலிருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலை உள்ள கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் இருந்து மரபு நடை சுற்றுலா தொடங்கியது. தொடர்ந்து, திருவீசநல்லூர், திருந்துதேவன்குடி, வேப்பத்தூர், திருவாவடுதுறை, திருக்கோடிக்காவல், திருமாந்துறை மற்றும் திருமங்கலக்குடி ஆகிய இடங்களுக்கும் சென்று முதல் நாள் பயணம் நிறைவடைகிறது.
2-ம் நாளான நாளை காலை, கும்பகோணத்திலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பயணிக்கும் மரபு நடைபயணமானது கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்களின் அரண்மனை இருந்ததாக அறியப்படும் மாளிகை மேடு பகுதிக்குச் செல்கிறது. அங்கு அகழாய்வுப் பகுதிகளை பார்வையிட்ட பிறகு, சலுப்பை, கீழசெங்கல்மேடு, மண்மலை போன்ற இடங்களில் வைக்கப்பட்டுள்ள வெற்றி சின்னங்களையும், திரைலோக்கி கோயிலில் உள்ள வெற்றிச் சின்னங்களையும் பார்வையிட்ட பின், ராஜேந்திர சோழனால் விரும்பி கட்டப்பட்ட மானம்பாடி கைலாசநாதர் கோயிலுக்கு வந்து மரபு நடைபயணம் நிறைவடைகிறது.
இந்தப் பயணத்தில் பங்கேற்றுள்ள 60-க்கும் மேற்பட்டோருக்கு, தமிழ்நாடு தொல்லியல் துறையின் முன்னாள் துணை கண்காணிப்பாளர் சி.வசந்தி, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தொலியியல் துறை உதவி்ப் பேராசிரியர் பெ.முருகன் ஆகியோர் விளக்கமளித்து வருகின்றனர்.