ஊழல்வாதிகள் அனைவரையும் கட்சியில் இணைத்து உத்தமர்கள் ஆக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் என பிரதமர் மோடி பொய் சொல்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பத்தாண்டுகளில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலர் மீது வருமானவரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால், துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் பல்வேறு மாநிலங்களிலும் பாஜகவின் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது சட்டநடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆனால், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, மற்றும் சிபிஐ ஆகிய அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக, எதிர்க்கட்சிகளில் இருந்து பாஜகவிற்கு தாவிய பலர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் மோசடி மற்றும் ஊழல் வழக்குகளை எதிர்கொண்டு வந்த 25 எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவில் இணைந்த பிறகு அவர்கள் மீதான நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘பாஜகவின் வாஷிங் மெஷின் பாணி ஆதாரபூர்வமாக தோலுரிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில் 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டுவிட்டது.
’பேச நா இரண்டு உடையாய் போற்றி’ என்ற பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது இன்று யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்கள் ஆக்கிவிட்டு ஊழலை ஒழிப்போம் என்று கூசாமல் பொய் சொல்லும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது. மொத்தத்தில், மோடியின் குடும்பம் என்பது இடி, ஐடி, சிபிஐ தான் என அவர் விமர்சித்துள்ளார்.