ஸ்ரீவில்லிபுத்தூரில் இடி மின்னல் தாக்கி இளைஞர் உயிரிழப்பு; கோயில் மண்டப கலசம் சேதம்!


ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது, இடி மின்னல் தாக்கியதில் கோயில் மண்டபத்தின் கலசம் இடிந்து விழுந்தது. மேலும், மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

ஶ்ரீவில்லிபுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது இடி தாக்கியதில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மடவார வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் எதிரே உள்ள தாமரைக்குளம் தெப்பத்தின் மைய மண்டபத்தின் கலசம் இடிந்து தண்ணீருக்குள் விழுந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் இந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்த நிலையில், இடி தாக்கி தெப்பக்குள மைய மண்டபத்தின் கலசம் சேதமடைந்தது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும், இந்தக் கோயிலின் பின்புறம் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில் மீன்பாசி காவல் பணியில் இருந்த கம்மாபட்டியை சேர்ந்த ஏமராஜன் மகன் லிங்கராஜ் (28) என்பவர், இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

x