கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கூத்தனப்பள்ளி பகுதியில் உள்ள டாடா தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் டாடா இந்த தொழிற்சாலையில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி அணைத்தனர்.
இன்று (செப்.28) காலை தொழிலாளர்கள் ஷிப்ட் முடிந்து வீட்டுக்குச் செல்லும் போது, அங்கிருந்த ஆனோ கெமிக்கல் பிளாண்டில் திடிரென தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தொழிற்சாலையில் இருந்த தீயணைப்பு வாகனத்தின் மூலமாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், தீ மேலும் பரவியதால் தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.
அப்பகுதியில் பணியில் இருந்த 3,000 தொழிலாளர்களை மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் பொருட்கள் சேதம் குறித்து ராயக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.