போதைப் பொருட்களை கண்டுபிடிக்க பயிற்சி பெற்ற 2 மோப்ப நாய்கள் சுங்கத்துறையில் சேர்ப்பு @ சென்னை விமான நிலையம் 


சென்னை: சென்னை விமான நிலைய சுங்கத்துறையில் போதைப்பொருட்களை கண்டுபிடிப்பதற்காக, இந்திய ராணுவத்தில் 9 மாதங்கள் பயிற்சி பெற்ற மேலும் 2 மோப்ப நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்கள் விமானங்களில் சென்னைக்கு கடத்தி வரப்படுவது அதிகரித்துள்ளது. சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் மட்டுமின்றி, மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர், மத்திய போதை கடத்தல் தடுப்பு பிரிவினரான என்சிபி ஆகியோரும், சென்னை விமான நிலையத்தில் திடீர் சோதனைகள் நடத்தி போதைப் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்.

போதை கடத்தலை கண்டுபிடிப்பதற்கு, விமான நிலைய சுங்கதுறையிடம் ஏற்கெனவே ஓரியோ என்ற இரண்டு வயது ஆண் மோப்ப நாயும், ஓர்லி எனப்படும் இரண்டு வயது பெண் மோப்ப நாயும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்நிலையில், கூடுதலாக ஸ்நோ பாய், ராகேஷ் எனப்படும் மேலும் இரண்டு மோப்ப நாய்கள், விமான நிலைய சுங்கத்துறையில் சேர்க்கப்பட்டுள்ளன.

மோப்ப நாய்களின் முக்கியமான பணிகள் போதைப் பொருட்களை கண்டுபிடிப்பது என்பதால், மோப்ப நாய்களுக்கு, இந்திய ராணுவ பயிற்சியகமான, அட்டாரி வாகா பார்டரில் சிறப்பு பயிற்சிகள் 9 மாதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 4 மோப்ப நாய்களும் ‘லேப்ரடார்’ வகையை சேர்ந்தவை ஆகும்.

சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலக வளாகத்தில், இந்த நான்கு மோப்ப நாய்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று பிற்பகலில் நடந்தது. அப்போது அதிகாரிகள் கூறுகையில், “சென்னை விமான நிலையத்தில் மோப்ப நாய்கள் பிரிவை மேலும் அதிகரிக்கும் திட்டம் உள்ளது. தற்போது போதைப் பொருட்களை கண்டுபிடிப்பதற்காக 4 மோப்ப நாய்கள் பயன்படுத்துவது போல், வெடிபொருள் போன்ற அபாயகரமான பொருட்களை கண்டுபிடிப்பதற்காக கூடுதல் மோப்ப நாய்கள் விரைவில் ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு, சென்னை விமான நிலைய மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்படவுள்ளன” என்றனர்.

x