மாநகர போக்குவரத்து கழகத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு மேலும் 66 தாழ்தள பேருந்துகள்


சென்னை மாநகர போக்குவரத்து கழக தாம்பரம் பணிமனையின் சார்பில் 10 புதிய தாழ்தள பேருந்துகளை தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா கொடியசைத்து மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் வசந்த குமாரி மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். | படம் : எம்.முத்துகணேஷ் |

சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மேலும் 66 தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. சென்னையில் குறுகிய சாலைகளில் பயணிக்க முடியாதது உள்ளிட்ட காரணங்களால் 6 ஆண்டுகளுக்கு முன்னர் தாழ்தள பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் மீண்டும் தாழ்தள பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததையடுத்து, மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 611 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் முதல்கட்டமாக 58 பேருந்துகளை, சென்னை, பல்லவன் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் முன்னிலையில் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 66 புதிய தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த பேருந்துகள் அம்பத்தூர் தொழிற்பேட்டை - வேளச்சேரி, தாம்பரம்-செங்குன்றம், கோயம்பேடு - அண்ணா சதுக்கம் உள்ளிட்ட 11 வழித்தடங்களில் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x