தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் கணக்கில் வராத 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 19 தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடாவை தடுப்பதற்காக வருமானவரித்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வருமானவரித்துறை புலனாய்வு பிரிவில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டுப்பாட்டு அறைக்கு தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
சென்னையில் கொண்டித்தோப்பு, ஓட்டேரி உட்பட 5 இடங்களில் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் 2.60 கோடி ரூபாயும், சேலத்தில் 70 லட்சமும், திருச்சியில் 55 லட்சமும், வாகனச்சோதனையில் 40 லட்சம் என நான்கு கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் முறையான ஆவணங்கள் இல்லாமல் கணக்கில் வராத பணமாக இருப்பதால் பணப்பட்டுவாடா செய்வதற்காக பயன்படுத்தப்பட்டதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு தொடர்பான வேட்பாளர்கள் யார் என்பது குறித்தும் வருமானவரித்துறை விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.