பீளமேடு மேம்பால பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்: எம்எல்ஏ கே.ஆர்.ஜெயராம் கோவை ஆட்சியரிடம் வலியுறுத்தல்  


கோவை: கோவை, பீளமேடு பகுதியில் மேம்பால பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எம்எல்ஏ கே.ஆர்.ஜெயராம், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியை இன்று நேரில் சந்தித்து கோரிக்கை கடிதம் வழங்கி வலியுறுத்தினார்.

கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பதாவது: சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பீளமேடு பகுதியில் அவிநாசி சாலை மேம்பால பணி நடைபெற்று வருகிறது. விளாங்குறிச்சி சாலை சந்திப்பில் ஏறுதளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 300 ஆண்டு பாரம்பரியம் வாய்ந்த இந்த சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்திட்டத்தின்படி, 12 அடி அணுகு சாலையை பயன்படுத்தி மட்டுமே விளாங்குறிச்சி சாலை வழியாக பீளமேடு பகுதிக்கு சென்று வர முடியும்.

பீளமேடு மற்றும் தென்புறம் உள்ள பீளமேடு புதூர், சவுரிபாளையம் பகுதியில் வசிக்கும் பல ஆயிரம் பொதுமக்கள் மற்றும் அந்த பகுதிகளுக்கு கல்வி பயில வரும் மாணவ, மாணவிகள், பணிக்கு சென்று வரும் பணியாளர்கள், மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கும் சூழல் உருவாகும்.

இது மட்டுமின்றி விளாங்குறிச்சி சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபடும். பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ மாணவிகள் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு இப்பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

x