நடிகை விஜயலட்சுமி விவகாரம்; வினையாக வந்த பிறந்த நாள் கொண்டாட்டம்! சீமானின் செல்வாக்கை சிதைக்கும் சூழ்ச்சியா? |3


சீமான், விஜயலட்சுமி

சீமான் - விஜயலட்சுமி விவகாரம் ஒவ்வொரு நாளும் புதிது புதிதான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. இதுநாள் வரை இந்த விவகாரத்தில் அமைதி காத்த சீமான், தற்போது தன் தரப்பை சட்டபூர்வமாக நிலை நிறுத்தும் நோக்கில் காய் நகர்த்த தொடங்கியுள்ளார். அதன் ஒருபகுதியாக சாட்டை துரைமுருகன் விஜயலட்சுமி பேசியதாக சில ஆடியோக்களை வெளியிட்டார். மேலும், இதன் பின்னனியில் திராவிட இயக்கத்தினர் இருப்பதாகவும் பகிரங்கமாக தெரிவித்தார்.

சாட்டை துரைமுருகன், வீரலட்சுமி

அடுத்த அதிரடியாக சீமான், நடிகை விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமியிடம் ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதே நேரம் தனக்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். இப்படி இந்த விவகாரம் நாளுக்கு நாள் திருப்பங்களுடன் வளர்ந்து வருகிறது. இதனிடையே, போலீஸ் விசாரணைக்காக 18-ம் தேதி நேரில் ஆஜராவதாக அறிவித்திருக்கிறார் சீமான்.

இந்த சர்ச்சைகளின் தொடக்கப் புள்ளியாக கருதப்படும் சீமான் – விஜயலட்சுமி காதலும், லிவிங் டு கெதர் பற்றியும் பார்ப்போம்.

தனது சகோதரியின் குடும்பப் பிரச்சினை காவல் நிலையம் வரை போனதால், சீமானிடம் உதவி கேட்டுப் போனார் விஜயலட்சுமி. எந்த பிரச்சினைக்காக போனார்களோ அந்த விவகாரம் தீர்ந்ததோ இல்லையோ. இப்படி சென்று வந்ததில் சீமானுக்கும் விஜயலட்சுமிக்கும் இடையில் ஒருவிதமான புரிதல் ஏற்பட்டு அது காதல் வரை கனிந்ததாகக் கூறப்படுகிறது.

சீமான்

அப்போது, நாம் தமிழர் கட்சி, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அல்லாமல் ஒரு இயக்கமாக செயல்பட்டு வந்த தருணம். அந்த அலுவலகத்திற்கு விஜயலட்சுமி அடிக்கடி சென்று வந்த நிலையில் சீமான் அப்போது தான், தன் காதலை வெளிப்படுத்தியதாக விஜயலட்சுமி கூறி வருகிறார். 2007-ம் ஆண்டு ‘வாழ்த்துக்கள்’ படப்பிடிப்பின் போதே காதல் வயப்பட்டாலும், அதைச் சொல்லும் தருணம் இப்போதுதான் வந்ததாக சீமான் கூறியதாக விஜயலட்சுமி தரப்பில் கூறப்படுகிறது.

சுரஜன் லோகேஷ், விஜயலட்சுமி

சீமான் பல மேடைகளில், “மணந்தால் ஒரு ஈழத் தமிழ் பெண்ணையே மணப்பேன்” என்று 2013 வரை பேசி வந்த நிலையில், “உங்களை மாதிரி ஒரு ஈழத் தமிழ் பொண்ணு கூடதான் வாழணும்னு ஆசைப்படுறேன்” என்று சீமான் சொன்னதாக விஜயலட்சுமி இப்போது கூறுகிறார்.

சீமான் வாழ்க்கையில் வரும் முன்னதாக 2004-ம் ஆண்டு கன்னட நடிகர் சுரஜன் லோகேஷ் என்பவருடன் விஜயலட்சுமிக்கு நிச்சயம் ஆகியிருந்தது. 2007-ல் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டருந்தனர். ஆனால், இருவரும் 3 ஆண்டுகள் பழகிய நிலையில் திருமண ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு இருவரும் சுமூகமாக பிரிந்தனர்.

சீமான் மேடைப்பேச்சின் போது

இதையடுத்து, விஜயலட்சுமியின் தாயாரிடம், விஜயலட்சுமியை சீமான் பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு விஜயலட்சுமியின் தாயும் ஒப்புக்கொண்டாராம். இந்த சமயத்தில் தமிழ் திரைப்பட நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் சார்பில், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சீமான், அமீர் ஆகியோரின் எழுச்சி உரை இருவர் மீதும் வழக்கு பதிய காரணமாக இருந்தது.

சீமான்

இந்த வழக்கில் ஜாமீனில் இருந்த சீமானும், அமீரும் தினமும் மதுரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இதற்காக, சீமான் மதுரையில் தங்கியிருந்தார்.

அந்த சமயத்தில், நடிகை விஜயலட்சுமி மதுரை சென்று, சீமானை சந்தித்ததாகச் சொல்கிறார்கள். விஜயலட்சுமி தனது புகாரில், தான் 20 நாட்கள் சீமானுடன் மதுரையில் இருந்ததாக கூறியிருந்தார்.

விஜயலட்சுமி வெளியிட்ட புகைப்படங்கள்

சீமான் சென்னை திரும்பியதும் அவரது விருகம்பாக்கம் அலுவலகத்திற்கு விஜயலட்சுமியும், வேளச்சேரியில் உள்ள விஜயலட்சுமியின் இல்லத்திற்கு சீமானும் சகஜமாக சென்று வந்தார்கள். அந்த சமயத்தில் தான், சீமான் தனது பிறந்தநாளை விஜயலட்சுமி வீட்டில் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார். அதுதொடர்பான புகைப்படங்கள் 2011-லேயே விஜயலட்சுமியால், வெளியிடப்பட்டது.

இந்த சூழலில் சீமானுக்கு ஏற்கெனவே தேன்மொழி என்ற பெண்ணுடன் அறிமுகம் இருந்ததும், அவரையே திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டதும் விஜயலட்சுமிக்கு தெரியவந்தது. இது இருவரது வாழ்க்கையில் என்ன மாதிரியான மாற்றத்தை கொண்டு வந்தது என்பதை தொடர்ந்து பார்ப்போம்!

(சர்ச்சை வளரும்...)

முந்தைய கட்டுரையைப் படிக்க...

சீமானின் செல்வாக்கை சிதைக்கும் சூழ்ச்சியா? - 2; விஜயலட்சுமி காதலைச் சொன்ன தருணம்!

x