கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் ஆய்வு


கோப்புப் படம்

செங்கல்பட்டு: நந்திவரம்-கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை போலீஸார் இன்று மாலை திடீரென ஆய்வு மேற்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதியில் நெல்லிக்குப்பம் செல்லும் பிரதான சாலையோரம், கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு, பதிவாளராக வைத்தியலிங்கம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், அலுவலக பணிகள் தொடர்பாக இன்று (செப்.27) நீதிமன்ற விசாரணைக்கு சென்றிருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் ஆய்வாளர் அண்ணாதுரை ஆகியோர்கள் தலைமையிலான போலீஸார், கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், 6 மணிக்கு தொடங்கிய ஆய்வில் நிலம் மற்றும் வீடு தொடர்பாக பத்திரப்பதிவு செய்ய வந்த நபர்களை ஆய்வு செய்த பின்னரே போலீஸார், அலுவலகத்திலிருந்து வெளியே அனுப்பினர். இதுகுறித்து, சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்த அதிகாரிகளிடம் கேட்டபோது, பொதுமக்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் ஆய்வு நடைபெற்று வருகிறது. ஆய்வு முடிந்த பிறகு விவரங்கள் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

x