கலைஞர் உரிமைத் தொகை வழங்கிய தளபதிக்கு நன்றி- கோலமிட்டு நன்றி சொன்ன அதிமுக கவுன்சிலர்


சொக்காயி

கலைஞர் உரிமைத்தொகையை வரவேற்றும், முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் வீட்டின் முன் கோலம் போட்ட அதிமுக கவுன்சிலரால் மதுரை மாநகராட்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மதுரையில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் இரு வேறு இடங்களில் தொடங்கி வைத்தனர்.

இந்த திட்டத்தில் நேற்று ரூ.1000 வங்கியில் பெற்ற பெண்கள், அந்த திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்து காலையில் தங்கள் வீடுகள் முன் கோலமிட்டு வரவேற்றனர்.

மாநகராட்சி 26வது வார்டிலும் பெண்கள், தங்கள் வீடுகள் முன் இதுபோல் கோலமிட்டு தமிழக அரசின் இந்த திட்டத்தை வரவேற்றனர்.

மதுரை மாநகராட்சி 26வது வார்டு கவுன்சிலராக அதிமுகவை சேர்ந்த சொக்காயி இருந்து வருகிறார். நரிமேடு பகுதியை சேர்ந்த இவர், இன்று காலை தன்னுடைய வீட்டின் முன், ‘‘கலைஞர் உரிமைத்தொகை வழங்கிய தளபதிக்கு நன்றி, கே.சொக்காயி, கவுன்சிலர், 26வது வார்டு, ’’ என்று கோலம் போட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வரவேற்றுள்ளார்.

தமிழக அரசியலில் திமுகவும், அதிமுகவும் எதிரெதிர் துருவங்களாக அரசியல் செய்யும் நிலையில் திமுகவினருடன் தொடர்பு வைத்திருந்தது தெரிந்தாலே ஜெயலலிதா காலத்தில் கட்சியை விட்டு உடனடியாக நீக்கப்படுவார்கள். ஆனால், தற்போது திமுக அரசின் திட்டத்திற்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்து அதிமுக கவுன்சிலரே தன்னுடைய வீட்டில் பகிரங்கமாக நன்றி தெரிவித்து கோலம் போட்ட இச்சம்பவம், மாநகர அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பேசிய கவுன்சிலர் சொக்காயி, ‘‘நான் அதிமுகவில்தான் இருக்கிறேன். என்னுடைய வார்டு பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் இந்த திட்டத்தை வரவேற்றேன். அதற்கும், அரசியலுக்கும் என்ன இருக்கிறது ’’ என்றார்.

அதிமுக மாநகர செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ, ‘‘சொக்காயி, திமுக, அதிமுக இரண்டு பக்கமும் இருந்து வருகிறார். அந்த வார்டு வட்ட செயலாளர் கூறினார் என்பதற்காக ‘சீட்’ கொடுத்தேன். 4 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுகவினர் வழக்கு போட்டனர். மதுரை மாநகர அதிமுக சார்பில் அந்த வழக்கை சந்தித்து அவரை அந்த வழக்கில் வெற்றிப்பெற வைத்தோம். தற்போது அதை எதிர்த்து திமுகவினர் உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். அந்த வழக்கிற்கு பயந்து அவர், இப்படி நடந்து கொண்டிருக்கலாம் ’’ என்றார்.

x