நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் ரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தில் கான்வென்ட் வளாகத்தை சேர்ந்தவர் அருளப்பன். இவருக்குச் சொந்தமான அலங்கார மாதா என்ற விசைப்படகில் அருளப்பன் உட்பட 12 பேர் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்திலிருந்து செப்டம்பர் 11ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
இவர்களது விசைப்படகில் கடந்த 15ம் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிலிருந்த அருளப்பன் உள்ளிட்ட மீனவர்கள் ஓமன் ஆழ்கடலில் தத்தளித்து வருவதாக அருளப்பனின் வீட்டுக்கு தகவல் கிடைத்துள்ளது. படகிலுள்ள 12 மீனவர்களில் 6 பேர் புதுச்சேரி, 2 பேர் மேற்கு வங்காளம், 3 பேர் ரவிபுத்தன்துறை, ஒருவர் பூத்துறை மீனவர் கிராமத்தைச் சார்ந்தவர்களாவர். விசைப்படகும், 12 மீனவர்களும் ஆழ்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததால் அவர்களது உறவினர்கள் மிகுந்த கலக்கமடைந்தனர்.
தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து படகையும் மீனவர்களையும் மீட்க வேண்டும் என சர்வதேச மீனவர் வளர்ச்சி அறகட்டளை தலைவர் ஜஸ்டின் ஆண்டனி தமிழக அரசுக்கு மனு அனுப்பினார். இதற்கிடையில், இன்று கடற்படையினரால் 12 மீனவர்களும் ஆழ்கடலில் மீட்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. அவர்களை கரைக்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஆனபோதும் இயந்திரக் கோளாறு ஏற்பட்ட விசைப்படகை மீட்பதில் பெரும் சிரமம் நிலவி வருகிறது.