திமுக பவள விழா பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரம்: பதாகைகளில் உதயநிதிக்கு முக்கியத்துவம்!


பவள விழா பொதுக் கூட்ட மேடைக்கு செல்லும் வழியில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதியுடன் வைக்கப்பட்டுள்ள முகப்பு

காஞ்சிபுரம்: திமுக பவள விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துவரும் நிலையில் பவளவிழா பொதுக்கூட்டத்திற்காக வைக்கப்படும் பதாகைகளில் உதயநிதிக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகின்றன.

காஞ்சிபுரத்தில் நாளை (செப்டம்பர் 28-ம் தேதி) நடைபெற உள்ள திமுக பவள விழா பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பொதுக்கூட்டம் நடத்தப்படும் திடலில் வைக்கப்படும் பதாகைகளில் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோருக்கு இணையாக உதயநிதியின் பதாகைகளும் வைக்கப்படுகின்றன.

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி திடலில் திமுக பவள விழா பொதுக்கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். திமுகவின் அமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதிகளில் பதாகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. சாலையோரங்களில் கொடிக் கம்பங்களும் நடப்பட்டு வருகின்றன. விழா நடைபெறும் இடத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா துரை, கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலுக்கு இணையாக வைக்கப்படும் அமைச்சர் உதயநிதியின் படம்.

இந்த விழா திடலில் பதாகைகளும் பெருமளவில் வைக்கப்பட்டு வருகின்றன. எல்லா இடங்களில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இணையாக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிக்கும் பதாகைகள் வைக்கப்படுகின்றன. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு பக்கவாட்டில் பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரின் படங்கள் இடம்பெற்ற பதாகைகள் வைக்கப்படுகின்றன. இவர்களுக்கு இணையாக இந்தப் பதாகையில் உதயநிதி ஸ்டாலினின் படமும் இடம்பெற்றுள்ளது.

திமுக பவள விழா பொதுக் கூட்டத்துக்காக அமைக்கப்படும் பிரமாண்ட பந்தல்.

இந்த பவள விழா பொதுக்கூட்டம் திமுகவின் அடுத்த வாரிசாக உதயநிதியை அறிவிக்கும் கூட்டம் போல் உள்ளதாக திமுகவினரே சிலாகிக்கின்றனர். இதனை வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், திமுக முக்கியத் தலைவர்களுக்கு இணையாக உதயநிதியின் படத்தை போட்டு பொதுமக்களுக்கும், கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும் அறிவித்து வருகின்றனர். இந்தக் கூட்டத்திலேயே உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்பதை வலியுறுத்தி அமைச்சர்கள் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பேசுவார்கள் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

x