விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 பேர் காயம்


விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் பெயர்ந்து விழுந்து கிடக்கும் மேற்கூரை.

கோவில்பட்டி: இன்று அதிகாலையில் விளாத்திகுளம் பேருந்து நிலைய மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்ததில் நாதஸ்வர கலைஞர் உட்பட 2 பேர் காயமடைந்தனர்.

விளாத்திகுளம் அருகே வேலிடுபட்டியை சேர்ந்த நாதஸ்வர கலைஞர் கண்ணன்(48). இவர் தலைமையிலான 7 கலைஞர்கள் தனியார் வேனில் விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் புதுப்பட்டி கிராமத்தில் நடந்த கோயில் கொடை விழா இசைக் கச்சேரிக்குச் சென்றனர்.

விழா முடிந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு மற்ற கலைஞர்களை வழியனுப்பி வைப்பதற்காக கண்ணன் விளாத்திகுளம் பேருந்து நிலையத்துக்கு வந்தார். இதில், கண்ணன், வேன் ஓட்டுநர் குருவார்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார்(45) ஆகியோர் பேருந்து நிலைய மேற்கு பகுதியில் உள்ள இருக்கையில் தூங்கினர். மற்றவர்கள் அப்பகுதியில் வேறு இடத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அதிகாலை 3.30 மணியளவில் பேருந்து நிலைய கட்டிடத்தின் மேற்குப் பகுதியில் உள்ள சிமென்ட் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில் அங்கு தூங்கிக் கொண்டிருந்த கண்ணனும் ரவிகுமாரும் காயமடைந்தனர். அங்கிருந்த மற்ற பயணிகள், வியாபாரிகள் சேர்ந்து, காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக விளாத்திகுளம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிராமங்கள் அதிகம் கொண்ட விளாத்திகுளம் தொகுதியை சேர்ந்த மக்கள், தங்களது அத்தியாவசிய தேவைக்கு விளாத்திகுளத்துக்குத் தான் வரவேண்டும். இதனால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். எனவே, மீண்டும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் பேருந்து நிலைய வளாகத்தை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்க முன் வரவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x