அரியலூர்: கடந்தாண்டு நெல்லுக்கு காப்பீடு செய்த அனைவருக்கும் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று (செப்.27) ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய போது, கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் 25-க்கும் மேற்பட்டோர், கூட்ட அரங்கினுள் வந்தனர். அதனை கண்ட ஆட்சியர் அவர்களிடம் என்ன கோரிக்கை என விசாரித்தார். அதற்கு அவர்கள், "கடந்தாண்டு நெல் சாகுபடி செய்தோம். போதிய மழை இல்லை. அதனால் விளைச்சலும் இல்லை. இதனிடையே நெல் பயிருக்கு பாரதப் பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடும் செய்து வைத்தோம். ஆனால், எங்கள் பகுதிக்கு காப்பீட்டுப் பணம் தரப்படவில்லை" என கூறினர்.
இதையடுத்து கூட்ட மேடையிலிருந்து விவசாயிகள் இருந்த பகுதிக்கு சென்ற ஆட்சியர், விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, “பயிர் சாகுபடி செய்தாலும், செய்யாவிட்டாலும், காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும். கடந்த ஆண்டு சாகுபடி செய்யப்பட்ட நெல் வயல்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என விவசாயிகள் வலியுறுத்தினர்.
கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த ஆட்சியர், விவசாயிகளிடமிருந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் செங்கமுத்து, தர்மராஜன், ராஜேந்திரன், விஜயகுமார், பாலசிங்கம், விசுவநாதன் உட்பட பலரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.