சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்று கொண்டார். இதன்மூலம் கே.ஆர்.ஸ்ரீராம் சென்னை உயர் நீதிமன்றத்தின் 34-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஆர்.மகாதேவன், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து , சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் அவர்களை கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதனை தொடர்ந்து கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று, நீதிபதி கே.ஆர். ஸ்ரீராமை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமனம் செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றுக்கொண்டார். சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராமுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, ரகுபதி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற கே.ஆர்.ஸ்ரீராமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.