இந்திய விமான படையின் 92-வது நிறுவன தினம்: 21 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி


பிரேம்குமார்

தாம்பரம்: இந்திய விமானப்படை 1932-ம்ஆண்டு அக். 8-ம் தேதி நிறுவப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் அக். 8-ம் தேதி நாடு முழுவதும் உள்ள இந்திய விமானப்படை தளங்கள் மற்றும் விமானநிலையங்களில் இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு அக். 8-ம் தேதி 92-வது இந்திய விமான படை தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. மேலும் ஒவ்வொரு இந்தியவிமானப்படை தினத்திலும் டெல்லியில் விமானப்படை சாகசங்கள் (airshow), அணிவகுப்பு உள்ளிட்டநிகழ்ச்சிகளை இந்திய விமானப்படை வீரர்கள் நடத்துவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இது குறித்து நிகழ்ச்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான இந்திய விமானப்படை துணை தளபதி பிரேம்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இதுவரை டெல்லியில் நடைபெற்று வந்த விமான படை வான்வழி சாகச நிகழ்ச்சி தற்போது சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6-ம் தேதி காலை 11 மணி முதல் 2 மணி வரைநடைபெறுகிறது. இதில் அரக்கோணம், பெங்களூர், தஞ்சாவூர், சூளுர், தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து 72 விமானங்கள் பங்கேற்க உள்ளன.

அதேபோல் அக். 8-ம் தேதி தாம்பரம் விமானப்படை தளத்தில் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி காலை 7:30 மணி முதல் 11 மணி வரை நடத்தப்பட உள்ளது.மேலும், விமான சாகச நிகழ்ச்சியை காண்பதற்கு சென்னை மெரினாவில் சுமார் 15 லட்சம் மக்கள்வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இதனை உலக சாதனையாக நிகழ்த்த உள்ளோம். சென்னையின்அனைத்து மக்களும் இதனை கண்டுகளிக்க வேண்டும்.

இதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டு விமானப்படை தினத்தன்று சென்னையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன, தற்போது 21 வருடங்கள் கழித்து சென்னை மெரினாவில் விமானப்படை தினத்தன்று விமானசாகசங்கள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. கடந்த 2022-ம் ஆண்டு சண்டிகரிலும், 2023-ம் ஆண்டு, பிரயாக்ராஜில் விமான சாகசம் நடத்தப்பட்டது. தற்போது 2024-ம் ஆண்டு சென்னையில் நடத்தப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய விமான படைத்தளத்தில் உள்ள பல்வேறு விமானங்கள் சாகசத்தில் ஈடுபட உள்ளன. மேலும், சென்னையில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x