திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 17.5 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை விநியோகம்: அமைச்சர் சக்கரபாணி தகவல்


சென்னை: இந்திய தேசிய உணவக சங்கத்தின் சார்பில் ‘இந்திய உணவகங்களின் உச்சி மாநாடு - 2024’ சென்னை எம்.ஆர்.சி நகரில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் மொத்தம் 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து 1,200 உணவகங்களின் உரிமையாளர்கள், 100 சமையல் கலை நிபுணர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டை தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைகூடுதல் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநாட்டில் சென்னையின் பாரம்பரிய உணவகங்களான அடையார் ஆனந்தபவன், அஞ்சப்பர், அமராவதி, புகாரி, பெஞ்சராங், திண்டுக்கல் தலப்பாக்கட்டி, பொன்னுசாமி, ஜூனியர் குப்பண்ணா, ரத்னாகபே, சங்கீதா, வசந்தபவன், கங்கோத்ரி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், காகடாராம்பிரசாத் ஸ்வீட்ஸ், மில்கிவே, ஸ்ரீமிட்டாய், அங்கிள் சாம்ஸ் கிச்சன் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது: தமிழக அரசின் பொதுவிநியோக உணவு திட்டத்தில் துவரம் பருப்பும், பாமாயிலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மானிய விலையிலேயே வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் ரேஷன் கடைகளிலும் செப்டம்பர் மாதத்துக்கான பாமாயிலும், துவரம் பருப்பும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் பாக்கெட்களில் வழங்கும் முறையை தமிழகம் முழுவதும் செயல்படுத்த முதல்வருடன் கலந்தாலோசித்து வருகிறோம். அதேபோல கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட உளுத்தம் பருப்பையும், கோதுமை மாவையும் நிதிநிலைக்கு ஏற்ப மீண்டும் கொண்டுவரவும் பரிசீலித்து வருகிறோம். கண் கருவிழி மூலம்ஸ்கேன் செய்து பொருட்களை பெறும் முறை 28 ஆயிரம் முழுநேர கடைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள கடைகளிலும் விரைவில் செயல்படுத் தப்படும்.திமுக ஆட்சிக்கு வந்த 40 மாதங்களில் 17.5 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் இந்திய தேசிய உணவக சங்கத்தின் துணை தலைவரும், மோமோ உணவகத்தின் நிறுவனரான சாகர் தர்யாணி, சென்னை மண்டல தலைவர்கள் கந்தர்வர் திங்கா, ஆர்.பாலச்சந்தர், ஜூபிளியன்ட் பாரதிய குழுமத்தின் நிறுவனர் ஹரிபாரதியா, கோக கோலா நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x