செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலையும், ரியாக்‌ஷன்களும் - டாப் 10 விரைவுச் செய்திகள்


ஜாமீனில் விடுதலையானார் செந்தில் பாலாஜி! - சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, 471 நாட்களுக்குப் பிறகு புழல் சிறையில் இருந்து வியாழக்கிழமை இரவு 7.10 மணிக்கு சிரித்த முகத்துடன் அவர் வெளியே வந்தார். சிறையின் வெளியே காத்திருத்த திமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு திமுக துண்டு அணிவிக்கப்பட்டது. செந்தில் பாலாஜியை வரவேற்க திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் சென்றிருந்தனர்.

முன்னதாக, ஜாமீன் உத்தரவாதங்களை எங்கு தாக்கல் செய்வது என்ற விவரங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படாததால் குழப்பம் ஏற்பட்ட நிலையில், செந்தில் பாலாஜியின் உறவினர்களான தியாகராஜன், சிவப்பிரகாசம் ஆகியோரது உத்தரவாதங்களை ஏற்று, செந்தில் பாலாஜியை விடுதலை செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்! - கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி மீது அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 மோசடி வழக்குகளை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளின் அடிப்படையில் அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர்.

ஏற்கெனவே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வு, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தனர்.

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகள் என்னென்ன? - அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில், அண்மையில் ஜாமீன் வழங்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் வெவ்வேறானவை. எனவே, செந்தில் பாலாஜி சட்டபூர்வமாக அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லை.

இந்த வழக்கை விசாரித்து முடிப்பதற்கு ஏற்படும் காலதாமதம், நீண்ட நாட்களாக செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வருவது, இந்த இரண்டு காரணங்களையும் அடிப்படையாக கொண்டுதான், உச்ச நீதிமன்றம் தற்போது ஜாமீன் வழங்கியுள்ளது, என்று செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கூறினார்.

மேலும், திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்கவோ, அவர்களை சந்தித்துப் பேசவோ எவ்வித முயற்சியும் மேற்கொள்ளக்கூடாது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி விசாரணை கைதியாகவே இருப்பதால், அவருடைய அடிப்படை உரிமையைக் கருத்தில் கொண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. ரூ.25 லட்சத்துக்கு இருநபர் உத்தரவாதம் வழங்க வேண்டும்.விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாது, என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கரூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்: செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியதை அடுத்து கரூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

‘உச்ச நீதிமன்றமே விடியல்’ - முதல்வர் ஸ்டாலின்: ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்ச நீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள்.

முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது” என்று செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை வரவேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், செந்தில் பாலாஜி அமைச்சர் ஆவதற்கு தடையில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வார் என்று கூறினார்.

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் - தலைவர்கள் ரியாக்‌ஷன்: தேர்தல் ஆணையம், புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை, நீதிமன்றங்கள் உள்ளிட்ட இந்த அமைப்புகளை முடக்கி பாஜக அரசு தனதாக்கிக் கொண்டது. எனவேதான் பிணையில் கூட வெளிவர முடியாமல் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டார். இப்போதாவது பிணை கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது, என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜிக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில்தான், அவர் சிறை சென்று வந்துள்ளார். அவரை சிறைக்கு அனுப்பியதே திமுகதான். இப்போது ஜாமீனில் வரும்போது தியாகம் என்கிறார்கள். திமுகவில் இருந்தால் தியாகம். அடுத்தக் கட்சியில் இருந்தால் அவர் செய்தது ஊழல் குற்றச்சாட்டாகிவிடுமா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். முறைகேடு வழக்கில் கைதான செந்தில் பாலாஜியை உறுதியானவர் என்று முதல்வர் பாராட்டுவது வேடிக்கை என்று பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்

பாஜகவினருக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சி கட்சிகளை சேர்ந்த சித்தராமையாவுக்கும், செந்தில் பாலாஜிக்கு ஒரு நீதியா? ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கிற பாஜகவினரே உங்களது புனிதர் வேடத்தை கலைக்கிற வகையில் தான் உச்ச நீதிமன்றம் இதுபோன்ற தீர்ப்புகளை வழங்கி வருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

தவெக மாநாட்டுக்கு 17 நிபந்தனைகளுடன் அனுமதி: விக்கிரவாண்டியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்த 17 நிபந்தனைகளுடன் புதன்கிழமை இரவு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. எக்காரணத்தை கொண்டும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. விளம்பரப் பதாகைகள், கட்-அவுட்டுகள் வைக்கக்கூடாது. முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பான இட வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மாநாட்டு திடலில் ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டும். விஐபி-க்கள் வரும் வழிகளில் எந்தவித பிரச்சினைகளும் நிகழாமல் போதிய தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரந்தூர் புதிய விமான நிலைய அப்டேட்: பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்துக்கு கொள்கையளவில் ஒப்புதல் பெறுவதற்கான விண்ணப்பத்தை மத்திய அரசிடம் டிட்கோ சமர்பித்துள்ளது. இந்தத் திட்டம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளுடன் இந்த விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசு இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“ஹரியானாவை பாஜக அழித்துவிட்டது” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு: ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அஸ்ஸாந்த் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, “10 ஆண்டுகளாக ஹரியானாவில் ஆட்சியில் இருக்கும் பாஜக, ஹரியானாவை அழித்தது. நரேந்திர மோடியும் ஹரியானா அரசும் வேலைவாய்ப்பு முறையை ஒழித்துவிட்டன. ஹரியானா விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை, அவர்களின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதில்லை” என்று குற்றம்சாட்டினார்.

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் திட்டவட்ட மறுப்பு: ஹிஸ்புல்லா இயக்கத்தினரைக் குறிவைத்து லெபனான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் போர் நிறுத்தம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியான நிலையில், “இது உண்மை இல்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக லெபனான் மீது கொடூரத் தாக்குதலை முன்னெடுத்துள்ளது இஸ்ரேல். தற்போது, தரைவழி தாக்குதலும் நடத்த வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, லெபனான் மீது இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 620-ஐ தாண்டியது. சுமார் 5 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

குமரியில் சோதனை தீவிரம்: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கன்னியாகுமரி வரும் கேரள சுற்றுலாப் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

x