மதுரை மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் பாலியல் துன்புறுத்தலை தடுக்க பாதுகாப்புக் குழு அமைப்பு


மதுரை: பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுக்க ஆட்சியர் உத்தரவிட்டநிலையில் முதல் முறையாக மதுரை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் பெண் ஊழியர்களுக்கான பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பெண்கள் அதிகம் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண் ஊழியர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல், பிற தொந்தரவுகளை தடுக்க பெண் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக உள்ளக முறையீடுகள் குழு அமைக்க ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டு சில வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தார். அதன் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் முதல் அலுவலகமாக, மதுரை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் பெண் ஊழியர்களுக்கான பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர், பெண்களுக்கு எதிராக அலுவலகத்தில் நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுப்பதோடு, பெண் ஊழியர்களை பாதுகாக்கும் பொருட்டு அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பார்கள். இந்த பாதுகாப்புக் குழுவில், தலைவர், 6 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். தலைவராக மாவட்ட வழங்கல் அலுவலகத்தின் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில் 50 சதவீதம் பெண் உறுப்பினர்கள் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், அதிகாரிகளும், மீதி 50 சதவீதம் பெண் உறுப்பினர்கள் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் இடம்பெறுகிறார்கள்.

இதபோல், விரைவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 10 மற்றும் 10-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணிபுரியும் பிற அரசு துறைகளிலும், பிற தாலுகா, ஒன்றிய அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களிலும் பெண் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக இந்த உள்ளக முறையீடுகள் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர். ஆட்சியரின் இந்த நடவடிக்கை, பெண் ஊழியர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

x