செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்தார்: திமுகவினர் உற்சாக வரவேற்பு


சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதனையடுத்து, புழல் சிறையிலிருந்து செந்தில் பாலாஜி வெளியில் வந்தார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தொடந்த வழக்கில் நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு இன்று அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து 15 மாதங்களுக்குப் பின்னர் செந்தில் பாலாஜி பிணையில் விடுதலையானார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஊடகப் பேட்டியில் கூறுகையில், “செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக விசாரணைக் குற்றவாளியாகவே இருந்ததால் அடிப்படை உரிமையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜாமீனுக்காக செந்தில் பாலாஜிக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் இரண்டு பேர் ஜாமீன் உத்தரவாதம் வழங்க வேண்டும். திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும். வழக்கில் வாய்தா கேட்கக் கூடாது போன்ற நிபந்தனைகள் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது” என்றார்.

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏதேனும் நிபந்தனை விதித்துள்ளதா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, “அதுமாதிரியான எவ்வித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவதற்கு எத்தகைய சட்டபூர்வ தடையும் இல்லை” என்று வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் பிணை உத்தரவாதங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் பார்வையிட்டார். அப்போது புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி காணொலி காட்சி வாயிலாக ஆஜர் ஆனார். ஜாமீன் குறித்து அமலாக்கத்துறையிடம் நீதிபதி கார்த்திகேயன் விளக்கம் கேட்டார். அதற்கு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்குவது குறித்து ஆட்சேபனை இல்லை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். செந்தில் பாலாஜியை வரவேற்க ஏராளமான திமுகவினர் புழல் சிறை வாசலில் மாலை முதலே குவிந்திருந்தனர். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

x