‘உன் தியாகம் பெரிது, உறுதி அதனினும் பெரிது’ - செந்தில்பாலாஜிக்காக உருகிய முதல்வர் ஸ்டாலின்!


சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதனையடுத்து, ‘உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது’ என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரை வரவேற்றுள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தொடந்த வழக்கில் நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு இன்று அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இதனையடுத்து 15 மாதங்களுக்குப் பின்னர் செந்தில் பாலாஜி பிணையில் விடுதலையாகவுள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஊடகப் பேட்டியில் கூறுகையில், “செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக விசாரணைக் குற்றவாளியாகவே இருந்ததால் அடிப்படை உரிமையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜாமீனுக்காக செந்தில் பாலாஜிக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் இரண்டு பேர் ஜாமீன் உத்தரவாதம் வழங்க வேண்டும். திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும். வழக்கில் வாய்தா கேட்கக் கூடாது போன்ற நிபந்தனைகள் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது” என்றார்.

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏதேனும் நிபந்தனை விதித்துள்ளதா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, “அதுமாதிரியான எவ்வித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவதற்கு எத்தகைய சட்டபூர்வ தடையும் இல்லை” என்று வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்.

இதனையடுத்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததை வரவேற்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு 471 நாள்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்ச நீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது.

எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாள்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

x