50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு இலக்கு: தொழில் வழிகாட்டி நிறுவன அலுவலக தகவல் பலகையில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்


சென்னை: தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவன அலுவலகத்துக்கு நேற்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதே நமது இலக்கு’ என்று அங்குள்ள தகவல் பலகையில் எழுதி வலியுறுத்தினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று வழிகாட்டி நிறுவன அலுவலகத்துக்கு வந்தார். அங்கு முதல்வரை தொழில்துறை அமைச்சர்டி.ஆர்.பி.ராஜா மற்றும் அலுவலர்கள் வரவேற்றனர். அங்குபல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் அலுவலர்களுடன் முதல்வர் உரையாடினார். அங்கிருந்து புறப்படும் முன்னதாக, அங்குள்ள தகவல் பலகையில், ‘50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நமது இலக்கு’ என எழுதி கையொப்பமிட்டார்.

முதல்வரின் வருகை தொடர்பாக, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் தற்போது ரூ.10 லட்சம்கோடி முதலீடு மற்றும் 31 லட்சம்வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து உருவாகிறது. இன்னும் பல முதலீடுகள் வர உள்ளன’’ என தெரிவித்திருந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், ‘‘அரசு நிர்வாகத்தில் இளம் ரத்தங்களான வழிகாட்டி நிறுவன பணியாளர்களைச் சந்தித்தேன். இவர்களின் சிறப்பான பணியால், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஈர்த்தரூ.10 லட்சம் கோடி முதலீடுகளில் 60 சதவீதம் பணிகள் நிறைவேறியுள்ளன. 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என அவர்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளேன்’’ என தெரிவித்துள்ளார்.

நெசவாளர்களுக்கு விருது: மாநில அளவில் சிறந்த கைத்தறி நெசவாளர், சிறந்த வடிவமைப்பாளர் மற்றும் சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 12 பேருக்கு ரூ.22.65 லட்சத்துக்கான காசோலைகள், சான்றிதழ்களை முதல்வர்மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த2023-24-ம் ஆண்டில், மாநில அளவில் பட்டு ரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் மற்றும் 3-ம் பரிசுக்கு முறையே காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் டி.சந்திரசேகரன், எஸ்.புகழேந்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல் 2-ம் பரிசுக்கு ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் எம்.டி.குமரேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு விருது, பாராட்டுச் சான்றிதழ்களை
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். உடன் அமைச்சர் ஆர்.காந்தி,
தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், துறை செயலாளர் தர்மேந்திர
பிரதாப் யாதவ், துறை இயக்குநர் அ.சண்முக சுந்தரம்.

இதேபோல் பருத்தி ரகத்தில் முதல் பரிசாக பரமக்குடி அன்னை சாரதா மகளிர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் டி.ஜே.பிரேமாவும், 2-ம் பரிசு பரமக்குடி லோகமான்ய திலகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் டி.எஸ். அலமேலுவும், 3-ம் பரிசு கோயம்புத்தூர், வதம்பச்சேரி  நடராஜர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் டி.மகாலெட்சுமியும் தேர்வாகினர்.

மேலும் மாநில அளவிலான சிறந்த வடிவமைப்பாளர் விருதுக்கான முதல் பரிசு காஞ்சி முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எஸ்.குமரவேலுவும் 2-ம் பரிசு காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வடிவமைப்பாளர் டி.பார்த்திபனும் 3-ம் பரிசு தந்தை பெரியார் பட்டுமற்றும் பருத்தி கைத்தறி நெசவாளர்கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்எம்.கமலவேணியும் தேர்வாகினர்.

இந்த 9 விருதாளர்களுக்கும் ரூ.20.40 லட்சத்துக்கான காசோலைகள், பாராட்டு சான்றிதழ்களை நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் வழங்கினார்.

தொடர்ந்து, மாநில அளவிலான சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுக்கான முதல் பரிசை கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் நவநாகரிக தொழில்நுட்பம் மற்றும் ஆடை வடிவமைப்பு இளநிலை அறிவியல் துறையில் முதலாமாண்டு பயிலும் மாணவி கே.தர்ஷணாவுக்கும், 2-ம் பரிசை மதுரையை சேர்ந்த சுயசார்பு வடிவமைப்பாளர் ந.சங்கருக்கும், 3-ம் பரிசை கோயம்புத்தூர், பி.எஸ்,ஜி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஆடைஅலங்கார வடிவமைப்பில் இளங்கலை தொழில்நுட்பவியல் துறைமுதலாமாண்டு மாணவி ஹரிணிக்கும் வழங்கினார். இவர்களுக்கு, ரூ. 2.25 லட்சம் காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், அமைச்சர் காந்தி, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், கைத்தறி, கைத்திறன், துணிநூல் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறி துறை இயக்குநர் அ.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x