தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்


சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் மார்ச் மாதத்துக்குள் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் இடைநிலை ஆசிரியர்கள் தொடங்கி கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர்கள் வரை அனைத்து நிலை ஆசிரியர் நியமனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஒருவர்கூட நியமிக்கப்படவில்லை. அரசு பள்ளிகளுக்கு 2,768 இடைநிலை ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரிமாதம் வெளியிடப்பட்டு, ஜூலை 21-ம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், அத்தேர்வுக்கான விடைக் குறிப்புகள்கூட இன்னும் வெளியிடப்படவில்லை.

அரசு கல்லூரிகளுக்கு 4,000 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கை கடந்த மார்ச்14-ம் தேதி வெளியிடப்பட்டு ஆகஸ்ட் 4-ம் தேதி நடத்தப்படவிருந்த போட்டித்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுவிட்டன.

கடந்த மே மாதம் வெளியாவதாக இருந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான அறிவிக்கையும், கடந்த ஏப்ரல் மாதம் வெளியாவதாக இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையும் இன்னும் வெளியாகவில்லை.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான முதன்மைத் தேவை கல்விதான். பள்ளிக்கல்வித் துறைக்காக ஆண்டுக்கு குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாயாவது ஒதுக்கப்பட வேண்டும். இதுவும்கூட மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் சுமார் 3 சதவீதம் என்ற அளவில்தான் இருக்கும். முதற்கட்டமாக இந்த அளவு நிதியை ஒதுக்கீடு செய்துவிட்டு, படிப்படியாக இதை அதிகரிக்க வேண்டும்.

மேலும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் மார்ச் மாதத்துக்குள் நிரப்பவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x