மாற்றுத் திறனாளிகளுக்கு பலனளிக்கும் மத்திய அரசாணையை அமல்படுத்த தமிழக அரசுக்கு சங்கங்கள் கோரிக்கை


சென்னை: வாகனங்கள் பயன்படுத்தும் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக, மத்திய அரசு கொண்டுவந்த அரசாணையை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்துமாறு மாற்றுத் திறனாளிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

வாகனங்களை உபயோகிக்கும் மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில், மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை கடந்தஆண்டு பிப்ரவரியில் ஓர் அரசாணை வெளியிட்டது. ஒன்றரைஆண்டுகள் ஆகியும் தமிழகத்தில் இந்த அரசாணை அமல்படுத்தப்படவில்லை. இதை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்துமாறு மாற்றுத் திறனாளிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க நிர்வாகி நம்புராஜன் கூறியதாவது: மத்திய அரசின் இந்த அரசாணை மூலம், கார் வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் சுங்க கட்டணம், சாலை வரியில் சலுகை பெற முடியும். அதிக மாற்றுத் திறன் பாதிப்பால் ஓட்டுநர் உரிமம் பெற முடியாதவர்களும் சாலை போக்குவரத்தில் பல உரிமைகள், திட்டங்களை பெற முடியும். ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் தமிழக அரசும், போக்குவரத்து துறையும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த அரசாணையை அரசு அமல்படுத்த வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து தமிழக போக்குவரத்து துறை செயலர் பணீந்திரரெட்டிக்கு தமிழக மாற்றுத் திறனாளிகள் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் சிம்மச்சந்திரன் அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது:

மாற்றுத் திறனாளிகள் ஓட்டும்வாகனத்துக்கு சாலை வரி, ஜிஎஸ்டிவரி, காப்பீடு போன்றவற்றுக்கு விலக்கு வழங்க வேண்டும் என்றுதேசிய மாற்றுத் திறனாளிகள் நலஆணையர் பரிந்துரையோடு, நீதிமன்றம் சென்றோம். உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதன்பேரில், மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சகம் கடந்த2020 மற்றும் 2023 பிப்ரவரியில் 2 அரசாணைகள் வெளியிட்டது. ஆனால், மாநில போக்குவரத்து துறை இதை அமல்படுத்தாமல் தாமதம் செய்வதால், மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்த அரசாணைகளை உடனே அமல்படுத்தவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

x