சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் அலுவலக பெண் டபேதார் உதட்டுச்சாயம் பூசிக்கொண்டு பணிக்கு வந்ததால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் பரவி வரும் நிலையில் அதை மேயர் அலுவலகம் மறுத்துள்ளது.
ஆவடியை சேர்ந்தவர் மாதவி (50). கடந்த 2009-ம் ஆண்டு அலுவலக உதவியாளராக சென்னை மாநகராட்சியில் பணியில் சேர்ந்தார். மாநகராட்சி மேயராக ஆர்.பிரியா பொறுப்பேற்ற பிறகு, அவரது டபேதாராக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவர் மாநகராட்சியின் முதல் பெண் டபேதாராவார். இவர் கடந்த மாதம் மணலி மண்டல அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதற்கு, அவர் உதட்டுச்சாயம் பூசி பணிக்கு வருவதுதான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி விளக்கம் கேட்டு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அலுவலகத்துக்கு உரிய நேரத்தில் வராமல் இருப்பது தொடர்பான கேள்விக்கு, “எனக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதனால் அலுவலக நேரத்துக்கு முன்னதாக வர இயவில்லை.
அலுவலகத்தை விட்டு தினமும் காலதாமதமாக இரவு 8 அல்லது 9 மணிக்குத்தான் புறப்படுகிறேன். வீடு சென்று சேர இரவு 11 மணி ஆகிறது. சமைத்து சாப்பிட்டு படுக்க இரவு 1 மணி ஆகிறது. அதனால் மீண்டும் காலையில் பணிக்கு வர உடம்பு சரியில்லாமல் போகிறது. கடந்த 2 நாட்களாகத் தான் அலுவலகத்தை விட்டு முன்னதாக செல்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முறைப்பணி நாட்களில் முறையாக பணிக்கு வராமல் தவிர்ப்பது குறித்த கேள்விக்கு, “நான் முறையாக பணிக்கு வந்துள்ளேன். முறைப்பணி செய்யாத நாட்களை குறிப்பிட்டு காட்டவும்” எனத் தெரிவித்துள்ளார்.
உயரதிகாரிகளின் ஆணையை உதாசீனப்படுத்துதல் குறித்த கேள்விக்கு, “எனக்கு என்ன ஆணை வழங்கினீர்கள், எந்த ஆணையை உதாசீனப்படுத்தினேன் என்று விவரமாகக் கூறவும்” எனக் கேட்டுள்ளார்.
அலுவலக நடைமுறையை மீறுதல் தொடர்பான கேள்விக்கு, “தாங்கள் என்னை உதட்டுச்சாயம் பூசக்கூடாது என்று கூறினீர்கள். நான் அதை மீறி பூசினேன். இது குற்றம் என்றால், எந்த அலுவலக ஆணையில் உள்ளது எனத் தெரிவிக்கவும். மாநகராட்சியில் யாரிடமும் பேசக்கூடாது, எந்த பிரிவுக்கும் போகக்கூடாது என்றால் அது மனித உரிமை மீறலாகும். அதற்கு உண்டான அரசாணையை குறிப்பிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக சென்னை மாநகராட்சி விளக்கம்அளித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், ``டபேதாராக பணிபுரிந்துவந்தவரிடம் தனிப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எந்தவித விளக்கமும் கேட்கப்படவில்லை. விசாரணையும் நடத்தப்படவில்லை. நிர்வாக காரணங்களால் மட்டுமே பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்’' என்று கூறப்பட்டுள்ளது.