திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.2.57 கோடி மதிப்பில் 5 புதிய மருத்துவ கட்டிடங்கள் திறப்பு!


திருவள்ளூர் மாவட்டத்தில்  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள  5 புதிய மருத்துவ கட்டிடங்களை இன்று பாரிவாக்கத்தில் அமைச்சர்கள் ஆர். காந்தி, மா. சுப்பிரமணியன் ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனர்.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.2.57 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 5 புதிய மருத்துவ கட்டிடங்களை இன்று பாரிவாக்கத்தில் அமைச்சர்கள் ஆர். காந்தி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், திருவள்ளூர் மாவட்டத்தில், ரூ.2.57 கோடி மதிப்பில் பூந்தமல்லி அருகே உள்ள பாரிவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம், பெருமாள்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், திருநின்றவூர் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், அகூர் துணை சுகாதார நிலைய கட்டிடம், திருநின்றவூர் - தாசர்புரம் துணை சுகாதார நிலைய கட்டிடம் என 5 புதிய மருத்துவ கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

அப்பணிகள் முடிவுக்கு வந்ததையடுத்து, 5 புதிய மருத்துவ கட்டிடங்கள் திறப்பு விழா, இன்று பாரிவாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று 5 புதிய மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்தனர்.

தொடர்ந்து, பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சமுதாய குடும்ப தத்தெடுப்பு திட்டத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.90 லட்சம் மதிப்பில் பேருந்து மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்டவற்றை அமைச்சர்கள் வழங்கினர். அத்துடன் அவர்கள் 9 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், 3 பேருக்கு கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் விலையில்லா கண் கண்ணாடிகள் உள்ளிட்டவற்றையும் வழங்கினர்.

இந்நிகழ்வுகளில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், திருவள்ளூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் மீரா, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி, மாவட்ட சுகாதார அலுவலர்களான பிரியாராஜ், பிரபாகரன் மற்றும் ஆவடி மற்றும் பூந்தமல்லி எம்எல்ஏ-க்களான சா.மு.நாசர், ஆ.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x