வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று சிறப்பு முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் நாளை சிறப்பு முகாம் நடைபெறும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “ சென்னை மாவட்டத்தில், மிக்ஜாம் புயல், மழை மற்றும் வெள்ளம் காரணமாக, ஆதார் அட்டை குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசுச் சான்று, பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கன சிறப்பு முகாம்கள் நடத்தி, பொதுமக்களுக்கு கட்டணமின்றி அதனை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களில் (1 முதல் 15 வரை) உள்ள கீழ்கண்ட 46 பகுதி அலுவலகங்களில் 12-12-2023 (செவ்வாய்க் கிழமை) அன்று முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறவிருக்கிறது. மொத்தம் 46 இடங்களில் நடைபெறும் இந்த சிறப்பு முகாம்கள் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.