``கர்நாடகாவில் எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம் நிகழலாம்'' என மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், கர்நாடகா முன்னாள் முதல்வருமான ஹெச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம், ஹாசனில், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹெச்.டி.குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ``காங்கிரஸ் ஆட்சியில் எதுவும் சரியாக இல்லை. இந்த ஆட்சி எப்போது கவிழும் என என்னால் கணிக்க இயலாது. ஆனால் ஆட்சியில் உள்ள முக்கிய அமைச்சர் ஒருவர் தன் மீதான, மத்திய அரசு கையில் எடுத்துள்ள வழக்கு விசாரணையிலிருந்து தப்புவதற்காக காங்கிரஸிலிருந்து விலகி, பாஜகவில் சேர உள்ளார். அவர் தன்னுடன் 50 முதல் 60 எம்எல்ஏக்களுடன் பாஜகவுக்கு அழைத்து வர உள்ளார். பாஜக தலைவர்களுடன் இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது'' என்றார்.
காங்கிரஸிலிருந்து வெளியேற இருக்கும் அந்த முக்கிய அமைச்சர் யார் என குமாரசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதற்கு, "முக்கிய தலைவர் ஒருவரிடமிருந்து இந்த நடவடிக்கையை எதிர்பார்க்கலாம். சிறிய தலைவரிடம் அல்ல" என தெரிவித்தார்.
மேலும், எப்போது வேண்டுமானாலும், மகாராஷ்டிராவில் நிகழ்ந்ததைப் போல் (ஆட்சி மாற்றம்) கர்நாடகாவிலும் நிகழலாம். அரசியல்வாதிகள் சித்தாந்தத்தை எல்லாம் பின்னால் வைத்துவிட்டு, தங்கள் வசதிக்கு எது உகந்ததோ அதனை தேர்வு செய்வதால் இதுபோன்ற அரசியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று குமாராசாமி கூறினார்.
224 சட்டப் பேரவை தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. அக்கட்சியில் 135 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு 66 எம்எல்ஏக்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 19 எம்எல்ஏக்களும் உள்ளனர்.
குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜக கூட்டணியில் உள்ளது. குமாரசாமி, குறிப்பிடும் அந்த காங்கிரஸ் தலைவர் தற்போதைய துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தான் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.