விஜயகாந்த் டிஸ்சார்ஜ்! மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை


தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார். வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டதால் கடந்த மாதம் 18-ம் தேதி சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) இருக்கும் அவருக்கு சில நேரங்களில் சுயமாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால்அந்த நேரங்களில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே, விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், அவரை நுரையீரல் நிபுணர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் அவருக்கு முழுவதுமாக ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் கேப்டன் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை யாரும் பரப்பாதீர்கள். வதந்தியை யாரும் நம்பாதீர்கள், அவர் விரைவில் வீடு திரும்பி நம்மை சந்திப்பார் என பிரேமலதா அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதனிடையே, தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார்" என்று கூறப்பட்டுள்ளது. இதனால் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

x