தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 வாரத்துக்கு மேலாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்றும் (மே 24) மழை நீடித்தது. இன்று (மே 25) காலை வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணையில் 35 மி.மீ. மழை பதிவானது.
சிவகிரியில் 34 மி.மீ., கருப்பாநதி அணையில் 29.50 மி.மீ., தென்காசியில் 27.60 மி.மீ., குண்டாறு அணையில் 22.40 மி.மீ., ஆய்க்குடி, சங்கரன்கோவிலில் தலா 16 மி.மீ. மழை, ராமநதி அணையில் 15 மி.மீ., செங்கோட்டையில் 14.80 மி.மீ., கடனாநதி அணையில் 8 மி.மீ. மழை பதிவானது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 36 அடியாக இருந்தது. ராமநதி அணை நீர்மட்டம் 5.50 அடி உயர்ந்து 52 அடியாக இருந்தது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 2.50 அடி உயர்ந்து 34.78 அடியாக இருந்தது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 4.50 அடி உயர்ந்து 55 அடியாக இருந்தது.
மே மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கிய நிலையில், கோடை மழையால் காற்றின் வேகம் குறைந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி ஏற்பட்டுள்ளது.
இன்று காலையில் குற்றாலம் பிரதான அருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் அங்கு குளிக்க அனுமதிக்கப்படவில்லை. ஐந்தருவி, சிற்றருவி, புலியருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்துச் சென்றனர்.