வீட்டின் முன்பு ‘நோ பார்க்கிங்’ போர்டு வைக்க கூடாது: மீறினால் நடவடிக்கை என போக்குவரத்து போலீஸார் எச்சரிக்கை


சென்னை: வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், வீடுகளுக்கு முன்பு 'நோ பார்க்கிங்' போர்டு வைக்கக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து போலீஸார் எச்சரித்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ‘சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் தங்களின் வீடுகள் முன்பாக எந்தவொரு அனுமதியும் பெறாமல் ‘நோ பார்க்கிங்’ போர்டுகளை வைத்துள்ளனர். இதன்மூலம் தங்களது வீடுகளின் முன்பாக உள்ள பொது சாலைகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என தடுத்து அவ்வப்போது தகராறுசெய்கின்றனர்.

சில இடங்களில் வீடுகளின் முன்பாக ‘நோ பார்க்கிங்’ அறிவிப்பு பலகையுடன் பூந்தொட்டிகளை வைத்தும், மண் பைகளை வைத்தும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்கின்றனர். சென்னையில் வாகனங்களை நிறுத்த முறையான வாகன நிறுத்துமிடங்கள் இல்லாததால், வாகன ஓட்டிகள் வேறு வழியின்றி தங்களது வாகனங்களை நெரிசல் மிகுந்த பகுதிகளில் நிறுத்திச் செல்ல நேரிடுகிறது.

எனவே, வீடுகளின் முன்பாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ‘நோ பார்க்கிங்’ என்ற அறிவிப்புபலகைகளையும், பூந்தொட்டி களையும் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சென்னையில் ‘நோ பார்க்கிங்’ போர்டுகளை அகற்ற எடுத்தநடவடிக்கை குறித்து போக்குவரத்துகாவல்துறை மற்றும் மாநகராட்சி யிடம் கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், சென்னை போக்கு வரத்து போலீஸார் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதில், ‘‘முன் அனுமதியின்றி, ‘நோ பார்க்கிங்’ பலகைகள், தடுப்புகள் அல்லது இதுபோன்ற தடைகளை பொதுச் சாலைகளில் வைக்க எந்தவொரு தனிநபருக்கோ, குடியிருப்பு சங்கங்களுக்கோ அல்லது வணிக நிறுவனங்களுக்கோ அனுமதி இல்லை.சாலையோரம் மற்றும் பொது இடங்களில் தனியார் வாகன நிறுத்தம் அல்லது பிற நோக்கங்களுக்காக அனுமதியின்றி ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது.

எனவே, அனுமதியின்றி பலகைகள் அல்லது பொருட்களை வைத்து, பொதுச் சாலைகளுக்கு இடையூறாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அங்கீகரிக்கப்படாத இடங்களில் நோ பார்க்கிங் பலகைகள், தடுப்புகள் மற்றும் பிற இடையூறுகளை வைத்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். வாகன நிறுத்தம் தொடர்பான பலகைகளை வைப்பதற்கு முன்பு, சரக போக்குவரத்து அதிகாரிகளிடம் இருந்து உரிய அனு மதிகளைப் பெற வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

x