கோவையில் பரபரப்பு... அண்ணாமலையின் வேட்புமனுவை ஏற்க கடும் எதிர்ப்பு!


பாஜக வேட்பாளர் அண்ணாமலை நேற்று மனு தாக்கல் செய்த போது

வேட்பு மனுவில் சட்டப்பேரவை தொகுதியை குறிப்பிட அண்ணாமலை தவறியதால், அவரது வேட்பு மனுவை ஏற்க கூடாது என நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு இடங்களிலும் வேட்பாளர்கள் அளித்துள்ள தகவல்களில் மாற்றுக் கருத்து இருப்பதாக கூறி எதிர் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், சில வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

கோவையில் பாஜக சார்பில் அண்ணாமலை, திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஜெகநாதன் உள்ளிட்ட 59 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

அண்ணாமலையின் வேட்பு மனுவுக்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு

இன்று காலை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார் பாடி தலைமையில் வேட்பு மனு பரிசீலனை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனுவில் உறுதிமொழி படிவம் 26ல், பாகம் ’பி’ யில் அவருக்கு வாக்கு இருக்கும் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதியின் விவரங்கள் முழுமையாக குறிப்பிடப்படவில்லை என நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். போட்டியிடும் தொகுதியை மட்டும் குறிப்பிட்டு விட்டு, தனது வாக்குரிமை, கரூர் மாவட்டத்தில் உள்ள எந்த சட்டப்பேரவை என்பது குறிப்பிடப்படவில்லை என விதிமுறைகளை சுட்டிக்காட்டி நாம் தமிழர் கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வேட்பு மனுவை ஏற்றுக்கொள்வதாக தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்தி குமார் பாடி அறிவிப்பு

இருப்பினும் அவரது வேட்பு மனுவை ஏற்றுக் கொள்வதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற வேட்பு மனு பரிசீலணையின் போது, பாஜக, அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...

x