தமிழகத்தில் போதை பொருள், பாலியல் வன்முறை அதிகரித்துள்ளதாக அதிமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்


தமிழகத்தில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாக கூறி, அதிமுக மகளிரணி சார்பில் அதன் செயலாளர் பா.வளர்மதி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, சரோஜா, நடிகைகள் விந்தியா, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். படம்: ம.பிரபு

சென்னை: தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கம், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டி, திமுக அரசைக் கண்டித்து அதிமுக மகளிரணி மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அதிமுக மகளிரணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி பேசியதாவது: அதிமுக மகளிரணிக்கு பெரிய வரலாறு உண்டு. இந்த அணி பலரை ஓடவிட்டுள்ளது. அதை திமுகவினர் மறக்கமாட்டார்கள். தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. ஆனால், திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழகம் முழுவதும் சிறுமி முதல் மூதாட்டி வரை பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். தமிழ்நாட்டில் 2 மணி நேரத்துக்கு ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாவதாக புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. போதைக் கலாச்சாரத்தால் அதிகரித்துள்ள பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க திமுக அரசு தவறிவிட்டது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சிக் காலங்களில் தமிழகம் பல்வேறு துறைகளில் முதலிடத்தில் இருந்தது. இப்போது திமுக ஆட்சியில் போதைப் பொருட்கள் புழக்கத்திலும், பாலியல் வன்கொடுமையிலும் முன்னிலை வகிக்கிறது. போதைப் பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும். தமிழகத்தில் பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க பெண்கள் உறுதியேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா, நடிகைகள் விந்தியா, காயத்ரி ரகுராம், மாநில, மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார். அதிமுக மகளிரணியினர் கருப்பு உடை அணிந்து திரளாகக் கலந்துகொண்டனர்.

x