உதயநிதி துணை முதல்வராவதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது: செல்வப்பெருந்தகை கருத்து


திருச்சி: உதயநிதி துணை முதல்வராவதை காங்கிரஸ் வரவேற்கிறது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ராகுல் காந்தியை பேசவிடாமல் தடுப்பதற்காக தொடர்ந்து அவதூறு, மிரட்டல் விடுத்துவரும் பாஜகவை கண்டித்தும், ஆர்எஸ்எஸ் திட்டங்களை கண்டித்தும் இண்டியா கூட்டணி சார்பில் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. அதில், முதல்வர் ஸ்டாலின் உட்பட இண்டியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்பர். இண்டியா கூட்டணி இரும்புக் கோட்டைபோல வலிமையாக உள்ளது.

அரசியலில் உதயநிதி நன்கு பயிற்சி பெற்றிருக்கிறார். சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். அவர் துணை முதல்வராவதை காங்கிரஸ் வரவேற்கிறது. அவரை துணை முதல்வராக அறிவித்தால் மகிழ்ச்சிதான். பட்டியலின, மலைவாழ், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருப்பது ராகுல் காந்தி மட்டும்தான். அவர் மக்களின் குரலாக இருக்கிறார். எனவேதான், அவரது பேச்சு, கருத்துகளை சிதைக்க முயற்சிக்கிறார்கள். இதை ஒருபோதும் நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

நடிகர் விஜய் அரசியல் வரவு திமுகவை பாதிக்காது. சட்டம்- ஒழுங்கை தமிழக முதல்வர் இரும்புக்கரம் கொண்டு பாதுகாத்து வருகிறார். காவல் துறையினரும் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றனர். இன்னும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள். பழநி கோயில் பஞ்சாமிர்தத்தில் கலப்படம் என திரைப்பட இயக்குநர் மோகன்ஜி பேசியது கற்பனையானது. அதற்கு வாய்ப்பே இல்லை. இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

x