மருத்துவமனையில் இருந்து அழகிரி மகன் துரை தயாநிதி டிஸ்சார்ஜ்: உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல ஏற்பாடு


வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வெளியே வந்த துரை தயாநிதி. படம்: வி.எம்.மணிநாதன்

வேலூர்: முதல்வர் ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகியின் மகன் துரை தயாநிதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இயன்முறை மருத்துவ சிகிச்சைக்காக (physiotherapy treatment) வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மார்ச் 14-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அவரது தந்தை அழகிரி, தாய் காந்தி ஆகியோர் அவரை உடனிருந்து கவனித்துக் கொண்டனர். தொடர் சிகிச்சையில் இருந்த துரை தயாநிதியை சிஎம்சி மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு முறை சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த மாதம் 26-ம் தேதி கனிமொழி எம்.பி.யும் துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்நிலையில், சிஎம்சி மருத்துவமனையில் இருந்து துரை தயாநிதி நேற்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதுகுறித்து உளவுத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘‘துரை தயாநிதி குணமடைந்தாலும், கடந்த 6 மாதங்கள் அளிக்கப்பட்ட சிகிச்சையில் ஏற்பட்ட முன்னேற்றம், அவரது குடும்பத்தினருக்கு திருப்திகரமாக இல்லை. எனவே, துரை தயாநிதியை அமெரிக்காவுக்கு விரைவில் அழைத்துச் சென்று, உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அமெரிக்காவில் வசித்து வரும் நடிகர் நெப்போலியன் செய்து வருவதாக அழகிரி தரப்பில் தெரிவித்துள்ளனர்’’ என்றனர்.

x