தமிழகத்தில் மூடப்பட உள்ள டாஸ்மாக் கடைகள் பட்டியல் விரைவில் வெளியீடு: அமைச்சர் முத்துசாமி தகவல்


ஈரோடு: தமிழகத்தில் மூடப்பட உள்ள டாஸ்மாக் கடைகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்பதில், எங்களுக்கு கொள்கை ரீதியாக மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால், ஒரே நாளில் மதுக்கடைகளை மூடினால், பெரிய பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி வரும். எனவே, படிப்படியாக மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். ஓரிடத்தில் மதுக்கடையை மூடினால், அங்கு தவறு நடக்குமா என்றும் பார்க்க வேண்டியுள்ளது. மதுக்கடையை மூடினால் மட்டும், அங்கு வசிப்பவர்கள் குடிப்பதை நிறுத்தி விடுகின்றனர் என்று சொல்லிவிட முடியாது. மதுக்கடைகளை மூடும்போது, அவர்களை அந்தப் பழக்கத்தில் இருந்து வெளியேற்றத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தேசிய அளவில் மதுக்கடைகளை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால், மாநில அரசு ஒத்துழைக்கும். தமிழகத்தில் மூடப்படும் மதுக்கடைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மூடப்பட உள்ள கடைகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

x