வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு


சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் இன்று (செப். 25) இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னைமண்டல வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய மேற்கு, அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதி மற்றும் வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இந்நிலையில், வடதமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தரைக்காற்று ஓரிரு இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை சில இடங்களில் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 96.8 முதல் 98.6 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 78.8 முதல் 80.6 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை மணலியில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது

x