அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி திண்டுக்கல் மருத்துவர் ஒருவரிடம் 20 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத் துறையால் சுற்றிவளைக்கப்பட்டார். அண்மைக் காலமாக நாட்டிலேயே உச்ச அதிகாரம் படைத்தவர்களாக தங்களைக் காட்டிக்கொண்ட அமலாக்கத் துறையினரை இந்த ஒரே ஒரு கைது நடவடிக்கை மூலம் அதிர வைத்திருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
துணை ராணுவப்படையை மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து குவித்ததிலும் சென்னை சாஸ்திரி பவன் அலுவலகத்திற்கு ராணுவப்படை காவலுக்கு ஏற்பாடு செய்ததிலும் இருந்தே இந்த விஷயத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகளின் அச்சத்தையும் பதற்றத்தையும் உணர்ந்து கொள்ள முடியும்.
லஞ்சம் வாங்கிய அமலாக்கத் துறை அதிகாரி ஒருவரை மாநில லஞ்ச ஒழிப்பு போலீஸ் கைது செய்திருப்பது இந்தியாவின் தற்போதைய ஜனநாயக முறைக்கு தேவையான ஒன்றுதான். இது மிக, மிகத் தைரியமான நடவடிக்கை என்று பலதரப்பாலும் வரவேற்கப்படுகிறது. அதற்குக் காரணம், சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை போன்றவை தற்போது செயல்படும் விதம்தான்.
அமலாக்கத்துறை அதிகாரிகளின் வாகனங்கள் வந்தாலே மாநில அரசு அதிகாரிகள் சல்யூட் அடித்து அனுப்புவதுதான் அண்மைக்கால நடைமுறை. அமலாக்கத்துறையினர் மீது யாரும் புகார் கொடுக்க துணிய மாட்டார்கள். அப்படியே கொடுத்தாலும் எடுக்க மாட்டார்கள். இப்படியெல்லாம் மிரளவைத்துக் கொண்டிருந்தவர்களைத் தான் இப்போது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தங்களது அதிரடி நடவடிக்கை மூலம் மிரட்டி இருக்கிறார்கள். இதை பிற மாநிலங்களின் காவல்துறையும் கையில் எடுக்கும் என்பதால் இது மிகவும் முன்னோடியான ஒரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
முதல்வர் வரைக்கும் கலந்தாலோசிக்கப்பட்ட பிறகே லஞ்ச ஒழிப்புத் துறையினர் இத்தகைய நடவடிக்கையில் இறங்கி இருக்க முடியும். என்ன வந்தாலும் பரவாயில்லை என முதல்வர் ஸ்டாலின் இந்த நடவடிக்கைக்கு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு க்ரீன் சிக்னல் காட்டியதிலும் ஆச்சரியம் ஏதுமில்லை. காரணம், அமலாக்கத் துறை மீது அவருக்கு இருக்கும் கோபம் அத்தகையது.
அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம், குவாரி அதிபர்கள் மீதான நடவடிக்கை, ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி ஆகியோருக்கு எதிரான நடவடிக்கைகள், ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறையால் வழங்கப்பட்ட சம்மன் - இத்தனை்யிலும் அமலாக்கத்துறை மீது முதல்வர் கடும் கோபத்தில் இருந்தார். அந்த நேரத்தில்தான் இப்படி ஒரு விஷயம் அவருக்கு வாகாகக் கிடைத்தது. தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை லஞ்ச ஒழிப்புத் துறையை வைத்து செய்து காட்டிவிட்டார் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.
இத்தகையை நடவடிக்கையானது அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் இருக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட திமுகவினருக்கு சிக்கலை உண்டாக்கலாம் என்ற காவல் அதிகாரிகளின் அலர்ட்டையும் மீறி இந்த நடவடிக்கைக்கு துணிந்திருக்கிறார் ஸ்டாலின்.
முதல்வரின் இத்தகைய நடவடிக்கைக்கு நிச்சயம் எதிர் வினை இருக்கும். இத்தனை நாளும் இருந்ததைவிட மாநில அரசுக்கு இன்னும் அதிகமாக சிக்கல்கள், நெருக்கடிகள் மத்திய ஏஜென்சிகளால் கொடுக்கப்படலாம். மாநில அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைத்துத் தரப்பையும் இனி மத்திய ஏஜென்சிகள் உன்னிப்பாக கவனிக்கும். எங்கெல்லாம் ‘நம்பர் 2’ வேலைகள் நடக்கிறது என்பதை தேடிப்பித்த்து அதை அரசுக்கு எதிராக அம்பலப்படுத்துவார்கள்.
இதன் பின்னணியில் இத்தனை எதிர்வினைகள் இருக்கும் என்றாலும் இந்த விஷயத்தை அங்கித் திவாரி கைதோடு விட்டுவிட மாநில அரசு தயாரில்லை. இதில் மற்ற சில அதிகாரிகளின் கள்ளக்கூட்டும் இருப்பதால், அவர்களுக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்ப திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஒருவேளை, விசாரணைக்கு வந்த இடத்தில் கைது செய்யும் தங்களின் உத்தியை லஞ்ச ஒழிப்புத் துறையும் கையாண்டால் என்ன செய்வது என்பதே அமலாக்கத்துறையில் இருக்கும் அங்கித் திவாரி போன்ற கருப்பு ஆடுகளின் இப்போதைய கவலை.
இதுகுறித்து திமுக தரப்பில் பேசியவர்கள், “இதுவரை ஊழல் பேர்வழிகளைக் குறிவைத்து பலகட்ட சோதனைகளை நடத்தி அதன் பின்னணியில் கோடிகளை பேரமாக பேசி கறந்திருக்கிறார்கள். அதனால் தான் சோதனை விவரங்களை பகிரங்கப்படுத்தாமல் கமுக்கமாகவே வைத்திருக்கிறார்கள். அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் உள்ளிட்டவர்கள் மீதான அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் இத்தகைய சந்தேகத்தைத்தான் ஏற்படுத்துகின்றன.
ஒருசில மாநிலங்களில், செல்வாக்கான புள்ளிகளை அமலாக்கத்துறை மூலமாக பாஜகவுக்கு இழுக்கும் வேலைகளையும் செய்தார்கள். செந்தில் பாலாஜி விஷயத்திலும் அத்தகைய முயற்சிகள் நடந்தன. இத்தகைய சூழலில் தான் அமலாக்கத்துறை அதிகாரிகளின் ஊழல் முகத்தை எங்கள் தளபதி அப்பட்டமாக தோலுரித்துக் காட்டி இருக்கிறார்” என்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞரும் திமுக செய்தித் தொடர்பாளருமான தமிழன் பிரசன்னா, “அமலாக்கத்துறையே தற்போது அரசியல் பழிவாங்கலுக்காக மத்திய அரசின் ஆயுதமாக மட்டும்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. யார் பலமானவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் மீது வேட்டை நடத்தி சிக்கவைத்து, அவர்களை பாஜகவுக்கு கடத்தும் பணியைத்தான் அமலாக்கத்துறை செய்துவருகிறது. ஊழல்வாதிகள், கிரிமினல்கள் என்று பாஜகவால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அமலாக்கத்துறை நடவடிக்கைக்குப்பின் பாஜகவில் சேர்க்கப்பட்டு புனிதமாக்கப்படுகிறார்கள்.
இந்த வேலையைச் செய்யும் அமலாக்கத்துறையில் இருக்கும் அத்தனை பேரும் புனிதமானவர்கள் இல்லை. அவர்கள் தங்களை புனிதமானவர்கள் போல காட்டிக்கொள்கிறார்கள். இப்போது அதன் அதிகாரி 20 லட்சம் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கி இருக்கிறார். அமலாக்கத்துறையினரும் அம்பலப்பட்டுப் போயுள்ளார்கள்.
யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்காது என்பதற்கான உதாரணம் தான் அங்கித் திவாரி கைது நடவடிக்கை. இது யாரையும் பழிவாங்கவோ பயமுறுத்தவோ கிடையாது. இதற்காக இனி அமலாக்கத்துறை இன்னும் வேகமாக பாய்ந்தாலும் அதை சமாளிக்க திமுகவுக்கு தெம்பும் திராணியும் இருக்கிறது. மற்ற துறைகளை ஏவினாலும் அதையும் எதிர்கொள்ள தயராகவே இருக்கிறோம். ஏனென்றால், எங்கள் மடியில் கனமில்லை... வழியிலும் பயமில்லை” என்றார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வந்த போது எதார்த்தமாக நிகழ்ந்த மின்வெட்டுப் பிரச்சினையே மின் துறைக்கு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையை வைத்து புழல் சிறைக்கு அனுப்புமளவுக்கு விவகாரமாகிவிட்டது. இப்போது அமலாக்கத்துறை அதிகாரியையே சிறைக்கு அனுப்பி சவால் விட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதற்கான எதிர்வினை எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்!