சர்க்கரை, உயர் ரத்த அழுத்த நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்க சமூக ஆதரவு குழுக்கள்: பொது சுகாதார துறை இயக்குநர் தகவல்


சென்னை: சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உறுதி செய்ய சமூக ஆதரவு குழுக்கள் அமைக்கப்படவுள்ளது என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இணை நோய் உள்ளவர்களைக் கண்டறிந்து வீடு தேடிச் சென்று பரிசோதனை மற்றும் மருந்து வழங்கும் சேவைகள் வழங்கப்படுகின்றன. அதேநேரம், நோயாளிகள், தங்களதுவாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளாமல் இருப்பதால் ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும்அவர்களுக்கு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதில்லை.

இதுதொடர்பாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பயனாளிகள் 4,206 பேரிடம்ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 56 சதவீதம் பேரின் ரத்த அழுத்தமும், 58.3 சதவீதம் பேரின் ரத்த சர்க்கரை அளவும் மட்டுமே கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. 47 முதல்59 சதவீதம் பேர் உடல் பருமன்கொண்டவர்களாகவும், புகையிலை, மது பயன்பாடு உள்ளவர்களாகவும் இருக்கின்றனர்.

இத்தகைய வாழ்க்கை முறையில் உள்ளவர்களுக்கு மருந்துகளை முறையாக வழங்கினாலும், இணை நோய்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியாது. அதனால், ஒவ்வொரு சுகாதார வட்டத்திலும் சமூக ஆதரவு குழுக்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இணை நோயாளிகள் அனைவரையும் அந்த குழுக்கள் ஒருங்கிணைத்து, பரஸ்பரம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற ஒத்துழைப்பு வழங்க வலியுறுத்த உள்ளோம்.

நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்கள், பிறருக்கு முன்மாதிரியாக செயல்பட்டு வழிநடத்தவும், ஒருங்கிணைந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுவார்கள். முதல்கட்டமாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அத்திட் டத்தை செயல்படுத்தி, அதன் முடிவுகளை ஓராண்டுக்கு பிறகு ஆய்வுசெய்ய உள்ளோம். அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் அதனை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) தேசிய நோய் பரவியல் நிறுவனம், பொது சுகாதாரத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து இந்த செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

x