மின்சாரம் இல்லாவிட்டால் யாருக்குமே கோபம் வரத்தானே செய்யும்! - சென்னை மேயர் பிரியா பேட்டி


மேயர் பிரியா

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை சென்னையை தலைகீழாகப் புரட்டிப் போட்டது. குடியிருப்புகளை சுற்றிலும் மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர். மின்சாரம், செல்போன் தொடர்புகள் இல்லாமல் தனித்தீவாக சென்னை மாறியது.

இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விசிட் அடித்த சென்னை மேயர் பிரியா, அதிகாரிகளையும் மாநகராட்சி ஊழியர்களை ஒருங்கிணைத்து நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தினார். இருந்தபோதும் மக்களின் உஷ்ணம் தணிந்தபாடி இல்லை. எதிர்க்கட்சிகள், பொதுமக்கள், சினிமா பிரபலங்கள் என சகட்டு மேனிக்கு அரசையும் மாநகராட்சியையும் அசராமல் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை புயல் வெள்ளத்தை சமாளிப்பதில் மாநகராட்சி நிர்வாகம் தோற்றுப் போனதா என்ற கேள்வியுடன் மேயர் பிரியாவிடம் பேசினோம். இனி அவரது பேட்டி...

மழை பாதிப்பு மீட்பு பணிகள் எந்த அளவில் உள்ளது?

95% பணிகள் நிறைவடைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். சென்னை மாநகராட்சியால் வெள்ளம் தேங்கிய இடங்களாக கண்டறியப்பட்ட 363 பகுதிகளில் 328 பகுதிகளில் தண்ணீர் வடிந்துள்ளது. மீதமுள்ள 35 இடங்களில் கொஞ்சம் மழை நீர் தேங்கியுள்ளது. அதனையும் அப்புறப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மின்சாரம் தடைப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் சென்னை முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பும்.

மழை வெள்ளத்தின் போது எது சவாலாக இருந்ததாக நினைக்கிறீர்கள்..?

பெருமழையே எங்களுக்கு சவாலாக இருந்தது. மழை இடைவிடாமல் பெய்தது அதுவே மிகப்பெரிய சவால். நாங்கள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மழை நீர் வடிகால் பணிகள் எங்களுக்கு முழுமையாக கைகொடுத்தது. முதல்வர் கூறியது போல பெரியளவில் உயிர்சேதம் ஏதும் இல்லாமல் இந்த பெரும் வெள்ளத்தை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். தொடர்ந்து மழை பெய்ததால் மீட்புப்பணிகள் தாமதம் ஆனது.

வேளச்சேரி ஏன் வெள்ளச்சேரி ஆனது?

வேளச்சேரிக்கு தனி கவனம் செலுத்தி நாங்கள் பணியாற்றி வந்தோம். சிக்கல் என்னவென்றால்... அது மிகவும் தாழ்வான பகுதி. அதுமட்டுமல்ல, வேளச்சேரி நிரம்பினாலும், மடிப்பாக்கம் ஏரி நிரம்பினாலும் அந்த பகுதிக்குத்தான் வரும் அதனால்தான் மிகுந்த கவனமாக வேலை செய்தோம். அங்கு தண்ணீர் தேங்கும் என்பது அந்த பகுதி மக்களுக்கே தெரியும். அடுத்த மழைக்குள்ளாக அங்கு துரித நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறித்தி உள்ளார். நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.

மழை வெள்ளத்தை சமாளிக்க முடியாமல் அரசு தோற்றுவிட்டது என்பதான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அரசியலுக்காக அவர்கள் குற்றம்சாட்டலாம். இது செயற்கை வெள்ளம் இல்லை; இயற்கை வெள்ளம். யாருமே எதிர்பார்க்காத ஒன்று. 2015 பெருவெள்ளத்திற்கு பிறகும் ஐந்தரை ஆண்டுகளை ஆண்டது அதிமுக அரசுதான். அவர்கள் எந்தப் பணியையும் செய்யவில்லை. நாங்கள் பொறுப்புக்கு வந்த 2021 மே மாதத்தில் இருந்து மழைநீர் வடிகால் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வந்தது.

அப்படியான பணிகளால்தான் சென்னை காப்பாற்றப் பட்டிருக்கிறது. அந்த மழைநீர் கால்வாய்கள் மூலம்தான் கடந்த வாரம் முன்பு வரை பெய்த மழைநீர் எல்லாம் வெளியேறியது. அதனை எல்லாம் பலர் பாராட்டி எழுதியது எல்லாம் எல்லோருக்கும் தெரியும். இப்போது பெய்துள்ள பெருமழை 2015-ம் ஆண்டைவிட அதிகம். இது வரலாறு காணாத மழை. புயலால் கடல் கொந்தளிப்பு அதிகம் இருந்தது அதனால் கால்வாய் மூலம் கடலில் கலக்க முடியாத மழைநீர் நகருக்குள் தேங்கியது.

2015-ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 289 பேர் பலியானார்கள். ஆனால், இந்த முறை அப்படி இல்லை. மக்களோடு களத்தில் முதல்வர், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் என அனைவரும் களத்தில் நின்றோம்; நிற்கிறோம்.

நடிகர் விஷால் கூட சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்திருந்தாரே..?

ஆமாம். அரசியல் செய்ய விரும்புபவர்கள் செய்யட்டும் அதைப்பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை. ஏற்கனெவே அவருக்கான பதிலை நான் தெளிவாக கொடுத்துள்ளேன். மேலும் இதில் பேச ஒன்றுமில்லை என நினைக்கிறேன்.


உங்கள் வார்டு மக்களே உங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளார்களே..?

மின்சாரம் இல்லாமல் தவித்தால் யாருக்குமே கோபம் வரத்தானே செய்யும். அவர்களின் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரத்தில் அவர்களின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம். பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதன் பாதிப்புகளை சோதனை செய்யாமல் எப்படி எடுத்தவுடன் மின்சாரம் கொடுக்க முடியும்? அதன் மூலம் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கும் நாங்கள் தானே பொறுப்பு. கோபத்தில் முற்றுகையிட்டார்கள் நான் விளக்கிக் கூறியதும் புரிந்துகொண்டார்கள். அன்றைக்கே அவர்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.

அடுத்தக்கட்ட நடவடிக்கைகள்..?

மீட்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தூய்மைப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. டெங்கு போன்ற பருவ கால நோய் பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க வேண்டும் என்பதே அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இருக்கும்.

x