உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளை சமரசம் செய்யும் முக்கிய தலைவராக நரேந்திர மோடி உள்ளதாக பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சார்பில் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். இவர் நேற்று இரவு தனது பிரச்சாரத்தை முதல்வர் ரங்கசாமி மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்களுடன் சேர்ந்து, புதுச்சேரியின் சனிமூலையான காலாப்பட்டு பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து தொடங்கினார்.
அப்போது நமச்சிவாயத்தை ஆதரித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி,” நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு நாடு அபரிதமான வளர்ச்சி கண்டுள்ளார். உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை பஞ்சாயத்து செய்யும் முக்கிய தலைவராக நரேந்திர மோடி உள்ளார். அனைவரும் வியந்து பார்க்கின்ற நாடாக இந்தியா உயர்ந்துள்ளது.
தற்போதைய சூழ்நிலைகள் தேசிய ஜனநாயக கூட்டணி 400- இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசின் உதவி பெற வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் நமச்சிவாயம் மக்களவைக்கு செல்ல வேண்டும். அவர் மக்களவைக்கு சென்றால் தான் புதுச்சேரிக்கு தேவையான வளர்ச்சி கிடைத்துக் கொண்டே இருக்கும்.
மத்தியில் எந்த ஆட்சி இருக்கிறதோ அதே மக்களவை உறுப்பினர் புதுச்சேரியில் இருந்ததால் தான் அத்தனை வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டு வர முடியும். கடந்த 5 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் மக்களவையில் பேசுவதற்கு கூட வாய்ப்பு கிடைக்காத போது, புதுச்சேரிக்கான திட்டங்களை எப்படி அவர் கொண்டு வந்திருப்பார். இந்தியா கூட்டணியில் சரியான ஒற்றுமை இல்லை. எத்தனை இடங்களை இந்தியா கூட்டணி பிடிக்கும் என்பது கூட கருத்துக்கணிப்பு தெரிவிக்க முடியாமல் உள்ளது” என்று அவர் கூறினார்.
இதையும் வாசிக்கலாமே...