உறுப்பினர் சேர்க்கை, மாவட்ட வாரியாக ஆய்வு: பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா சுற்றுப் பயணம்


சென்னை: உறுப்பினர் சேர்க்கை, மாவட்ட வாரியாக ஆய்வு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை பணிகள் கடந்த 2ம் தேதி தொடங்கியது. தமிழக பாஜகவை பொருத்தவரை 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. மத்திய அரசின் திட்டங்களால் அடைந்த பலன்களை எடுத்துரைத்து உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அனைத்து சமூகம், மதத்தினரையும் கட்சியில் உறுப்பினராக்க வேண்டும். குறிப்பாக சிறுபான்மையினரை அதிகளவில் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு பூத் வாரியாக குறைந்தபட்சம் 200 பேரை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான பணிகளை மேற்கொள்ள பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இது குறித்து தமிழக பாஜக அலுவலக செயலாளர் எம்.சந்திரன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: "தமிழக பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தமிழகம் முழுவதும் பாஜகவின் அமைப்பு ரீதியான 65 மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, அவரது சுற்றுப் பயணம் செங்கல்பட்டில் தொடங்கியது. இதையடுத்து, இன்றும், செப்.26, 27 தேதிகளிலும் சென்னையில் அவர் ஆய்வு மேற்கொள்கிறார்.

இவ்வாறு சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து, அக்.17-ம் தேதி கோவை மற்றும் நீலகிரியில் பயணத்தை நிறைவு செய்கிறார். இந்த சுற்றுப் பயணத்தை ஒருங்கிணைத்து நடத்த கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சுற்றுப் பயணம் குறித்து தமிழக பாஜக நிர்வாகிகள் கூறும்போது, "சுற்றுப் பயணத்தின்போது உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஹெச்.ராஜா முக்கிய அறிவுறுத்தல்களை வழங்குவதோடு, மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையும் மேற்கொள்கிறார். அப்போது இதுவரை நடைபெற்ற கட்சி பணிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்யவிருக்கிறார்" என்றனர்.

x